திவ்ய பிரபந்தம்

Home

3.10.2 அல்லியம் பூ மலர்க் கோதாய்

பெரியாழ்வார் திருமொழி 3.10.2

உள் இதழ் விளங்கும்படி மலர்ந்த அழகிய (பூ மலரால் தொடுக்கப்பட்ட ) மாலை போல் இருப்பவளாய் இரண்டு தாமரை மலர் போன்ற கண்களையும் மடப்பத்தையும் உடைய மான போன்றவளே, தேவரீர் திருவடிகளிலே பணிந்த என்னுடைய விண்ணப்பத்தை சொல்கிறேன்; தேவரீர் கேட்டு அருள வேண்டும். இரவு காலத்தில் பெருமாளும் (ஸ்ரீ ராமனும்) தேவரீரும் இனிது இருப்பாக இருந்ததோரு இடத்தில் சிறந்த பூ மல்லிகை மாலையைக் கொண்டு அங்கு கட்டி வைத்ததும் ஒர் அடையாளம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

அயோத்தியில் இருந்த காலத்தில் பிராட்டியும் பெருமாளும் (ஸ்ரீராமனும்) இரவு வேளையில் ஏகாந்தமான இடத்தில் உல்லாசமாக இருக்கையில், பிராட்டி ஸ்ரீராமனை மல்லிகை மாலையைக் கொண்டு கட்டியதை அநுமான் அடையாளமாய் கூறுகின்றான்; இது மிகவும் அந்தரங்கமாக நடந்திருக்கும் ஆதலால், இது மற்ற அடையாளங்களைப் போலன்றிச் சிறந்த அடையாளமாகும் என்கிறார். வனவாசம் சென்றமை இன்னும் கூறப்படாமையால், இது நாட்டில் இருந்த போது நிகழ்ந்ததாகக் கொள்வது பொருந்துமே அன்றி, வனவாச காலத்தில் நிகழ்ந்ததாக கொள்ளுதல் பொருந்தாது என்பது தெரியும்.

முதலடியில் பிராட்டிக்கு மலர்மாலை உவமையாக சொல்லப்பட்டது அவரின் உடம்பின் இளைய தன்மையிலும், மென்மையிலும், துவட்சியிலும் என்று கொள்ளலாம்.

அடி பணிந்தேன் விண்ணப்பம் என்று சொல்வது, அனுமன் தன்னுடைய ஸ்வரூபரூபமாக அடியேன் தேவரீரின் திருவடிகளில் வணங்கி தலை படைத்த பலன் கிடைத்ததை சொல்கிறார். இனி வாய் படைத்த பலன் கிடைக்கும்படி விண்ணப்பிக்கிறேன் என்கிறார்.

இதனை கேட்பதால் உண்டான அன்பும் ஆசையும் பெருக கடாக்ஷித்துக் கொண்டு இருப்பதை கண்டு துணை மலர்க் கண் மட மானே என்கிறார். தன் பக்கம் வாத்சல்யம் தோன்ற கடாக்ஷித்து கொண்டு இருப்பதாலும், பவ்யதையாலும் ‘துணை மலர் கண்’ என்கிறார். மடப்பத்தை உடையதால் மானே என்கிறார்.

Leave a comment