திவ்ய பிரபந்தம்

Home

3.9.7 காளியன் பொய்கை

பெரியாழ்வார் திருமொழி 3.9.7

காளியநாகம் கிடந்த பொய்கையானது கலங்கும்படி சென்று குதித்து அவனுடையதாய் ஆகாசத்தளவும் கிளர்ந்திருக்கிற ஐந்து பணங்களிலும் மாறி மாறி அடியிட்டு நின்று கூத்தாடி (அவன் சரணம் புக்களவிலே) மறுபடியும் அந்த காளியனுக்கு திருவுள்ளம் இரங்கின வித்தகன் புஜபலத்தையும் வீரப்பாட்டையும் பாடிப்பற, பழிப்பற்ற நீல ரத்னம் போன்ற வடிவழகை உடையவனை பாடிப்பற என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

“பஞ்சவர் தூதனாய்” என்ற ஐந்தாம்பாட்டில் அருளிச் செய்யப்பட்ட காளியன் மீது நடனம் ஆடிய சரித்திரத்தை மீண்டும் இந்த பாட்டினால் அருளிச் செய்கிறார். ஏன் எனில், மற்ற பகைவர்கள் எல்லோரையும் விட காளியன் மிக்க கொடியவனாதலால் அவன் கொழுப்பை அடக்கின வரலாற்றை மீண்டும் சொல்கிறார். அதனை ஒரு முறை சொல்லி, மறந்து விட ஆழ்வாருக்கு மனம் இல்லை; சகடாசுரன், பூதனை முதலிய கொடிய ராக்ஷசர்கள் கண்ணன் ஒருவனுக்கே தீங்கு விளைக்க, காளியன், அப்படி இல்லாமல், தான் கிடந்த பொய்கையை அணுகின தாவர, விலங்குகளுக்கு எல்லாம் தன் விஷத்தின் கொடுமையாலே பட்டு விழும் படி ஊர் முழுவதற்கும் தீங்கு செய்ததால் இவனது கொடுமை மீண்டும் மீண்டும் பேச்சுக்கு விஷயம் ஆனது.

Leave a comment