திவ்ய பிரபந்தம்

Home

3.9.6 முடி ஒன்றி மூவுலகங்களும்

பெரியாழ்வார் திருமொழி 3.9.6

‘திருமுடி சூடி, பூமி, ஸ்வர்க்கம் பாதாளம் என்ற மூன்று உலகங்களையும் பரிபாலித்து கொண்டு தேவரீருடைய தாசனான எனக்கு கிருபை பண்ணி அருள வேண்டும் ‘ என்று பிரார்த்தித்து அந்த சக்கரவர்த்தி திருமகன் பின்னே சென்று தொடர்ந்த ஒப்பில்லாத குணங்களை உடைய ஸ்ரீ பரதாழ்வானுக்கு அவன் மனம் வருந்தி நின்ற அந்த காலத்தில் (தன்னுடைய) ஸ்ரீ பாதுகைகளை அளித்து அருளினவனை பாடிப் பற ; திரு அயோத்தியில் உள்ளவர்க்கு ராஜாவானவனைப் பாடி பற என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

பரதன் கேகய நாட்டிலிருந்து அயோத்திக்கு வந்து அங்கு நிகழ்ந்ததை அறிந்து இராமன் வனம் புகும் படி அமைந்ததற்காக மிகவும் வருந்தினான். தந்தைக்குரிய அந்திமக்கிரியைகளைச் செய்து முடித்தான். ராஜகுலத்தில் உள்ளவர்களும், ஜனங்களும், வசிஷ்டர் முதலியோர்களும், ‘நாடு ராஜா இல்லாமல் இருக்கக்கூடாது’ என்று சொல்லி பரதனுக்கு முடி சூட்டுவதற்காக மங்களகரமான வாத்தியங்களை இசைக்க, அந்த சப்தங்கள் கேட்டபோது மனம் கனக்க பரதன் நோவுபட்டான்.

இராமனை திரும்ப அழைத்து வந்து முடிசூடுவிக்கக் கருதி, தான் அரசினைத் துறந்து மரவுரி புனைந்து தாய்மார்கள் முதலியோரோடு, சேனை சூழ வனம் புகுந்தான். சித்திர கூடத்தில் இராமனைக் கண்டு திருவடி தொழுது, அவரை அயோத்திக்கு வந்து முடிசூடி அரசாளுமாறு வேண்டினான். இராமன் தந்தையின் சொல் பழுது படாதபடி பதினான்கு வருடம் வன வாசம் கழித்துப் பின்னர் வருவதாகக் கூறி அதுவரை அரசாளுமாறு நியமித்து, தனக்குப் பிரதிநிதியாகத் தனது திருவடி நிலங்களைத் தந்து அனுப்பி அருளின வரலாறு இங்கே கூறப் படுகிறது.

‘நமது தாய் நன்று செய்தாள், நாம் சுகமாக வாழலாம் நமக்குப் பெரிய ராஜ்யம் கிடைத்தது’ என்று சந்தோஷித்து திரியாமல் ஸ்ரீராமனிடம் கொண்ட மிகுந்த அன்பினால் மிகவும் வருந்தினமையால், “படியில் குணத்துப் பரதநம்பி” என்றார்.

Leave a comment