மாற்றுத்தாய் சென்று வனம் போகே என்றிட, * ஈற்றுத் தாய் பின்தொடர்ந்து எம்பிரான் என்று அழ, * கூற்றுத் தாய் சொல்லக் கொடிய வனம் போன * சீற்றமிலா தானைப் பாடிப்பற சீதை மணாளனைப் பாடிப்பற.
பெரியாழ்வார் திருமொழி 3.9.4
தம் தாயாரை ஒத்த சுமித்திரை சென்று காட்டுக்கே போ என்று நியமிக்கவும் பெற்ற தாயாரான ஸ்ரீ கௌசல்யா பின்னே சென்று ‘என் நாயனே’ (உன்னைப் பிரிந்து எப்படி தரித்திருப்பேன்) என்று கதறி அழவும் கூற்றம் போன்ற கைகேயி உடைய சொல்லைக் கொண்டு கொடிய காட்டில் எழுந்தருளிய ‘காட்டிலே போக விட்டாள்’ என்று கோபம் இல்லாதவனை பாடிப்பற சீதைக்கு வல்லபனான பாடிபற என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய முயலுகையில் மந்தரையால் மனம் கலக்கப்பட்ட கைகேயி தசரதரை நோக்கி, முன்பு அவர் தனக்குக் கொடுத்திருந்த இரண்டு வரங்களுக்குப் பயனாகத் தன் மகனான பரதனுக்குப் பட்டம் கட்டவும் (கௌஸல்யை மகனான இராமனை பதினான்கு வருஷம் வன வாசம் செலுத்தவும் வேண்டும் என்று நிர்பந்த படுத்தினாள். அது கேட்டு வருந்திய தசரதர், வருந்தினாலும், தான் ஒரு சத்யவாதி ஆகையால், அவளுக்கு உறுதி கொடுத்து, அவளையே இராமனுக்கு தெரிவித்து விடவும் சொல்ல, கைகேயி இராமனை பார்த்து, உங்கள் தந்தை பரதனுக்கு நாடு கொடுத்து, உன்னை பதினான்கு வருஷம் காட்டுக்கு போகச் சொல்லுகிறார்’ என்று சொல்ல, அச்சொல்லைச் சிரமேற்கொண்டு, அந்தத் தாயின் பேச்சையும் அவளுக்கு தனது தந்தை தந்திருந்த வரங்களையும் தவறாது நிறைவேற்றி மாத்ரு பித்ரு வாக்ய பரிபாலனம் செய்தலின் பொருட்டு இராமன் செல்ல, தன்னை விட்டுப் பிரிய மாட்டாது தொடர்ந்த ஸீதையோடும் இலக்குமணனோடும் அயோத்தியை விட்டுப் புறப்பட்டு வன வாசம் செய்தான்.
தந்தை ஏவ வேண்டும் என்று எதிர்பாராமலே இராமன் கைகேயிடம் நீ சொன்னாலும் புறப்படுவேன் என்று சொல்லும்படி இருந்ததால் “கூற்றுத்தாய் சொல்லக் கொடிய வனம்போன” என்று சொல்வதும் உண்டு. கூற்றம் போன்ற கைகேயி சொன்ன சொல் என்பதாலும் கூற்றுத்தாய் கைகேயி என்று சொல்வதும் ஊன்று. ஆனால் மாற்றுத்தாய் என்று கைகேயியையும், கூற்றுத்தாய் என்று ஸுமித்ரையையும் சொல்லுகிறதாக உரையாசிரியர் அருளி செய்து உள்ளார். கூறுபட்ட ஹவிஸ்ஸை உண்டதாலே ஸுமித்திரையை கூற்றுத்தாய் என்கிறார். சுமித்திரை ஸ்ரீ ராமனிடம் இந்த ராஜ்ஜியம் உனக்கு வேண்டாம், வனமே போகு என்று அருளியதாக சொல்கிறார். இது இராமாயணத்தில் இல்லை என்றாலும், மயர்வர மதி நலம் அருள பெற்ற ஆழ்வார் சொல்வதாகவும் அருளி செய்கிறார்.
புத்திரனைப் பிரிவதனால் வருத்தமுற்ற கௌஸல்யை “என்னையும் உன்னுடன் அழைத்துக்கொண்டுபோ” என்று கதறி அழுதுகொண்டு பின் தொடர்ந்தது பாடலின் இரண்டாவது அடியில் விளங்கும். அதனால் ஈற்றுதாய் என்பது ஈன்ற தாயான கௌசல்யையை குறிக்கும். ஆக மாற்றுத்தாய் கைகேயி என்று ஆழ்வார் அருளுகிறார். பெருமாள் (ராமர்) எப்போதும் நடுவில் ஆச்சி என்று மிக மரியாதையுடன் அழைப்பார்.
பட்டம் கட்டிக் கொள்ள நிற்கிற நம்மைக் கட்டின காப்போடு காட்டுக்குப் போகச் சொல்லுகிறார்களே என்று நெஞ்சில் சிறிதும் வருத்தம் இன்றி, மகிழ்ச்சியுடன் பெருமாள் (இராமர்) காட்டுக்குச் சென்றதால், “சீற்றமிலாதானை” என்கிறார்.
Leave a comment