திவ்ய பிரபந்தம்

Home

3.9.3 உருப்பிணி நங்கையைத் தேர்

பெரியாழ்வார் திருமொழி 3.9.3

ருக்மிணிப்பிராட்டியை திருத்தேரிலே ஏற்றிக்கொண்டு அவ்வளவிலே போகும்பொது, எதிர் நின்று விரைந்தோடி வந்தவனாய் கர்வத்தை அடைந்த ருக்மனுடைய வீரியம் அழியும்படி தலையை அமபாலே சிறத்து விட்டவனுடைய வன்மையை பாடிப்பற, தேவகி வயிற்றில் பிறந்து சிங்கம் போன்ற வீரப் பாட்டை உடையவனை பாடிப்பற என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

விதர்ப்ப தேசத்தில் குண்டினி என்கிற பட்டணத்தில் பீஷ்மகன் என்கிற ஒரு அரசனுக்கு ருக்மன் முதலிய ஐந்து பிள்ளைகளும் ருக்மிணி என்கிற ஒரு பெண்ணும் இருந்தனர். அந்த ருக்மிணி ஸ்ரீமஹாலக்ஷ்மியின் அவதாரம்; அவள் திருமண வயது வந்தவுடன், கண்ணன் அங்கு சென்று இந்த பெண்ணை எனக்குத் திருமணம் செய்து கொடுங்கள் என்று கேட்டான்; ருக்மன் என்ற அவளது சகோதரன் அவளைச் சிசுபாலனுக்குக் கொடுக்க நினைத்துக் கண்ணனுக்குக் கொடுக்க முடியாதென்று சொன்னான். சிலநாள் கழிந்தபின் ருக்மிணியின் கல்யாணத்துக்காக சுயம்வரம் என்று முடிவு செய்து எல்லா தேசத்து அரசர்களையும் வரவழைத்தான். இதன் இடையில் ருக்மிணி “அன்றிப் பின் மற்றொருவற்கு என்னை பேசலொட்டேன், மாலிருஞ்சோலை எம் மாயற்க்கு அல்லால்’ (பெரியாழ்வார் திருமொழி 3.4.5) என்ற துணிவை உடையவளாகையால் தன்னை எவ்வகையினாலும் மணந்து செல்லும்படி கண்ணனிடத்துக்கு ஒர் அந்தணனைத் தூது விட்டிருந்தாள். கண்ணனும் அப்படியே பலராமன் முதலியோரைக் கூட்டிக் கொண்டு அந்த பட்டணத்திற்கு எழுந்தருளினான். கல்யாண முஹுர்த்த தினத்துக்கு முதல்நாள் ருக்மிணியைத் தான் ப்ரகாசமாக எடுத்துத் தேரில் ஏற்றிக் கொண்டு ஊர் நோக்கிப் புறப்பட்டான். சிசுபாலன் முதலிய சில அரசர்கள் கண்ணனை எதிர்த்துப் போர் செய்ய முயல பலராமனும் தானுமாக அவர்களை அடக்கி வென்று ஓட்டி விட்டான். பின்பு ருக்மிணியின் தமையனான ருக்மன் மிகவும்  வெகுண்டு ஆத்திரப்பட்டு கண்ணனை முடிப்பதாக ஓங்கி வர, அவனைக் கண்ணன் ருக்மினியின் வேண்டுதலின் படி உயிர்க் கொலை செய்யாமல் அவனது மீசையையும், குடுமியையும் சிரைத்துப் மான பங்கப் படுத்தின் என்பது வரலாறு. இப்படிப்பட்ட கண்ணனின் வீரத்தை பாடுக என்று கண்ணன் பக்கம் நின்ற தோழி கூறுகிறார்.

Leave a comment