திவ்ய பிரபந்தம்

Home

3.9.2 என் வில் வலி கண்டு போ

பெரியாழ்வார் திருமொழி 3.9.2

ஸ்ரீராமனுடைய பரம ரசிகையாய் நின்ற ஆய்மகளின் பாசுரம், இது.

என்னுடைய வில்லின் வலியை கண்டு போ என்று எதிர்ந்து வந்த பரசுராமனுடைய வில்லையும் தபஸ்சையும் அவன் கண் முன்னே அழித்தவனாய் இதுக்கு முன்னே திருக்கையில் வில்லை வளைத்து தாடகி எண்ணும் ராக்ஷசி உயிரை முடித்த சக்கரவர்த்தி திருமகனுடைய வில்லின் வன்மையை பாடிப் பற , தசரத புத்திரனுடைய குணத்தை (இது ராமாவதாரத்தில் ஈடுபட்டவள் வார்த்தை) பாடிப் பற என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

ஸீதா கல்யாணத்தின் பின் தசரத சக்ரவர்த்தி திருக்குமாரர்களுடனே மிதிலை சென்று அயோத்திக்கு திரும்பி வருகையில், பரசுராமன் வலியச் சென்று இராமனை எதிர்த்து “முன்பு ஹரிஹர யுத்தத்தில் முறிந்து போன சிவ தநுஸ்ஸை முறித்த திறத்தை அறிந்தோம். அது பற்றிச் செருக்கடைய வேண்டாம் ; இந்த ஸ்ரீ மஹா விஷ்ணு தநுஸ்ஸை வளை, பார்ப்போம். என்று சொல்லித் தான் கையில் கொண்டு வந்த ஒரு வில்லைத் தசரத ராமனின் கையில் கொடுக்க, அப்பெருமான் உடனே அதனை வாங்கி எளிதில் வளைத்து நாணேற்றி அம்பு தொடுத்து “இந்தப் பாணத்திற்கு இலக்கு என்ன ” என்ற கேட்க, பரசுராமன் அதற்கு இலக்காகத் தன் தபோபலம் முழுமையையும் கொடுக்க, அவன் க்ஷத்ரிய வம்சத்தைக் கருவறுத்தவனாக இருந்தாலும், வேத வித்தும் தவ விரதம் பூண்டவன் என்று இருந்த அவனைக் கொல்லாமல் அவனது தவத்தை மட்டும் கவர்ந்த ஸ்ரீராமன், அயோத்திற்குச் சென்றான் என்ற வரலாறு சொல்லபடுகிறது.

எதிர்வந்தான் தன்வில்லினோடும் என்பது எதிர் வந்த பரசுராமனுடைய வில்; அது மட்டுமல்ல, எதிர் வந்தவன் கையிலிருந்த, தன்னுடைய வில் என்றும் கொள்ளலாம்; தன்னுடைய என்பது, விஷ்ணுவான தன்னுடைய வில் என்று ஆகும்.

ஸுகேது என்னும் யக்ஷனது மகளும் ஸுந்தனன் என்பவனது மனைவியும் ஆயிரம் யானை வலிமை கொண்டவளுமான தாடகை, தன் கணவன், அகஸ்த்ய மஹாமுனியின் கோபத்தீக்கு இலக்காய்ச் சாம்பல் ஆனதை அறிந்து தன் புத்திரர்களாகிய ஸுபாஹு மாரீசர்களுடனே அம்முனிவனை எதிர்த்துச் சென்ற போது அவனிட்ட சாபத்தால் தன் மக்களோடு இராக்ஷச தன்மையை அடைந்தாள். பின்பு முனிவர்களுடைய யாகங்களைக் கெடுக்கின்ற இவர்களை அழித்துத் தன் வேள்வியைக் காக்கும் பொருட்டு விச்வாமித்ர முனிவன் தசரத சக்ரவர்த்தியினிடம் அநுமதி பெற்று இளம் பிராயமுடைய இராமனை லக்ஷ்மணனுடன் அழைத்துக் கொண்டு போன போது, அந்த முனிவரின் ஆசிரமத்திற்குச் செல்லும் வழியில் வந்து எதிர்த்த தாடகையை ஸ்ரீராமன் முனிவரது கட்டளைப்படி பெண் என்றும் பாராமல் போர் செய்து கொன்றான் என்பது வில் வலித்து முது பெண் உயிர் உண்டான் என்பதை சொல்லும்.

இந்த தாடகை தீமை செய்வதில் மிகவும் பழகினவள் என்பதால் முதுபெண் என்று கூறப்பட்டாள்.

காயும் கடுஞ்சிலையென் காகுத்தன் வாரானால்,‘ (திருவாய்மொழி 5.4.3) என்று சொல்லியபடி, எதிரிகளை அழிப்பதில், சக்ரவர்த்தி திருமகன் கண் பார்க்கிலும் கண் பார்க்காமல் காரியம் செய்யும் திண்மை வில்லுக்கு வலிமை ஆகும் என்கிறார்.

Leave a comment