திவ்ய பிரபந்தம்

Home

3.9.1 என் நாதன்

கிருஷ்ணாவதாரத்தில் அதிக பிரியம் உடையவராய் கண்ணனின் குணங்களில் ஆழ்வார் சென்ற பதிகங்களில் அனுபவித்ததை பார்த்தோம். இந்த பதிகத்தில் ஆழ்வார் இராம கிருஷ்ண அவதாரங்களின் குணா நலன்களை ஒரே சமயத்தில் அனுபவிக்க ஆசைப் படுகிறார். இரண்டு கோபிகா பெண்கள் ஒருவர் ராமர் பக்கதிலும் மற்றொருவர் கிருஷ்ணன் பக்கத்திலும் இருந்து இருவரும் தங்களை எதிரிகளாகவே கருதி வாதம் செய்வதை, அதோடு மட்டும் இல்லாமல், மற்ற அவதாரங்களையும் கொண்டு வர்ணிக்கிறார்.

பெரியாழ்வார் திருமொழி 3.9.1

எனக்கு சேஷியான சர்வேஸ்வரனுடைய தேவியான ஸத்யபாமை பிராட்டிக்கு அவள் விரும்பின போது, இன்பமான கற்பகப்பூவை கொடுக்காத இந்த்ராணி நாயகனான இந்த்ரன் கண்டு நிற்கும்போதே, தழைத்துக் குளிர்ந்து பூத்துக் கிடக்கிற கற்பக மரத்தை, சாம வேத ரூபனாய் வலையை உடைய பெரிய திருவடியாலே, பலவந்தமாக பிடுங்கி கொண்டு வந்து ஸத்யபாமை கிரகத்தில் நட்டவனாய், என்னை அடிமை கொண்டவனுடைய நினத்தது முடிக்கும் வல்லமையை ப்ரீதியாலே பாடிக்கொண்டு வுந்தி பற ; எமக்கு உபகாரகனானவனுடைய வன்மையைப் பாடிப் பற என்று கிருஷ்ணாவதாரத்தில் ஈடுபட்ட ஒருத்தி சொல்கிறாள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

ஸ்ரீகிருஷ்ணவதார குண நலன்களை பற்றி ஆய்மகளின் பாசுரம். கண்ணன், நகராஸுரனை கொன்று, அவனால் முன்னே கவர்ந்து கொண்டு போகப்பட்ட இந்திரனின் தாயான அதிதியினுடைய குண்டலங்களை அவளுக்கு திருப்பிக் கொடுப்பதற்காகப் பெரிய திருவடியின் மேல் சத்தியபாமாவுடன் தேவலோகத்திற்குச் செல்ல, அங்கு இந்திராணி ஸத்யபாமாவிற்கு பல உபசாரங்களைச் செய்தும் தேவர்க்கே உரிய பாரிஜாத புஷ்பம் மானிடப்பெண்ணாகிய இவளுக்குத் தகாதென்று கொடுக்கபடவில்லை. அதனால், அவள் அதனைக் கண்டு விருப்பம் கொண்டவளாய் எம்பெருமானைப் பார்த்து, இந்த பாரிஜாத மரத்தினை துவாரகைக்குக் கொண்டு போக வேண்டும் என்றதை கண்ணன் கேட்டு, அந்த மரத்தை பெரிய திருவடியின் திருத்தோளின் மேல் வைத்து அருளினபோது, இந்திராணி தூண்டுதலினால் வந்து தன்னுடன் யுத்தம் செய்து நின்ற இந்திரனைச் எல்லா தேவ படைகளுடன் தனது சங்க நாதத்தினாலே பங்கப் படுத்தினது சொல்லப்பட்டது.

வன்னாத புள்ளால் கருடன் வேத மயனென்று வேதம் கூறும் என்று ஆளவந்தாரும் கூறுவார். புள்ளுக்கு விசேஷம் எது என்றால், வன்மை, அதாவது நினைத்தபடி செய்து முடிக்கவல்ல சக்தி. 

இந்த ஆழ்வார் ராமகிருஷ்ண அவதார குண நலன்களை ஒரே காலத்தில் அநுபவிக்க விரும்பின போதும் முதன்முதலாக, கிருஷ்ணனின் பெருமைகளை முதலில் பேசியதால் இவருக்கு கிருஷ்ணா அவதாரத்திலேயே மிக்க அபிமானம் என்று கூறுவார்கள்.

Leave a comment