வெண்ணிறத் தோய் தயிர் தன்னை வெள் வரைப் பின் முன் எழுந்து, * கண் உறங்காதே இருந்து கடையவும் தான் வல்லள் கொலோ, * ஒண்ணிறத் தாமரைச் செங்கண் உலகளந்தான் என் மகளை, * பண்ணறை யாப் பணி கொண்டு பரிசற ஆண்டிடுங் கொலோ.
பெரியாழ்வார் திருமொழி 3.8.9
மென்மை தன்மை உடைய என் பெண், வெண்மை நிறத்தை உடைய செறிந்த தயிரை கிழக்கு வெளுப்பதற்கு முன்னே எழுந்து இருந்து கண் விழித்துக் கொண்டுஇருந்து வருந்தி கடையவும் வல்லவளோ ! இப்படி இருக்க அழகிய நிறத்தை உடைய தாமரை மலர் போன்று சிவந்த கண்களை உடைய எல்லா உலகங்களையும் நீர் ஏற்று அளந்து கொண்டவன் என் மகளை இழி தொழில்களிலே ஏவிக் கொண்டு பெருமை கெட ஆளுவனோ, அறியவில்லை என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
கண்ணன் என் மகளைக் கொண்டு போய்த் தயிர் கடைகிற தொழிலில் நியமித்து விட்டால், என் மகள் கிழக்கு வெளுப்பதற்கு முன் உறக்கத்தை ஒழித்து, எழுந்து, தயிர் கடைவதற்கு அப்படிப்பட்ட வல்லவள் ஆவாள் என்று சொல்லிச் சற்று நேரம் மூர்ச்சித்துக் கிடந்து, பின்பு தெளிந்து, எல்லாரையும் குளிரச் சேர்க்கும்படியுள்ள கண்கள் படைத்தவனும், எல்லோரையும் சமமாக தன் திருவடிக் கீழாக்கிக் கொண்டவனுமான திரிவிக்ரம பெருமான் ஆன கண்ணன், திருமகள் போல வளர்த்த என் மகளை அதர்மமாக இழி தொழில்களில் ஏவி, அவளது பெருமைகளைக் குலைப்பனோ அல்லது பெருமைக்குத் தக்கவாறு திருவுள்ளம் பற்றுவனோ என்று சந்தேகிக்கிறாள். கண்ணன் திருமாளிகையில் கறவைக் கணங்கள் (பசுகூட்டங்கள் ) பலவகையால் அவை அளவற்ற பாலைத் தரும், பின்பு அதைத் தோய்த்துத் தயிராக்கிக் கடைவதற்கு வெகு சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் என்கிறார்.
Leave a comment