திவ்ய பிரபந்தம்

Home

3.8.4 ஒரு மகள் தன்னை உடையேன்

பெரியாழ்வார் திருமொழி 3.8.4

ஒரே பெண்பிள்ளையை உடையவளான நான் லோகமெங்கும் பரவின கீரத்தியோடு பெரிய பிராட்டியாரைப் போல சீராட்டி வளர்த்தேன்; இப்படிப்பட்டவளை சிவந்த கண்களை உடைய மயக்கத்தை உடைய கண்ணன் தானே கொண்டு போய் விட்டான்; பெரிய பெண் பிள்ளையாய் கூடி வாழ்க்கை வாழ்ந்து பெருமை பொருந்திய பிள்ளையை பெற்ற யசோதைப் பிராட்டியானவள் மருமகளைக் கண்டு பிரியப்பட்டு மணவாட்டிக்கு செய்ய வேண்டிய சீர்களை செய்வாளோ அல்லது கொஞ்சமாக செய்வாளோ என்று சந்தேகப்படுவது என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

அரிய நோன்புகளை நோற்று பெண் பிள்ளையைப் பெற்ற நான், இவளை உலகில் பெண்களுக்கு உதாரணமாக சொல்லப்படும் பெரிய பிராட்டியோரைப் போல எல்லோரும் புகழும்படி, சீராட்டி வளர்த்தேன். பெரிய திருமொழி (3.7.9) ல் சொன்னபடி, ‘கடி மாமலர்ப் பாவை யொப்பாள்’ எல்லோருக்கும் உபமானமாக இருக்கும்படி வளர்த்தேன் என்கிறார். ,இப்படி வளர்ந்த இவளை எம்பெருமான் பெரியதிருவடியான கருடனுடன் வந்து அழைத்துப்போகாமல், கள்வன்கொல் பதிகத்தில் சொன்னமாதிரி பிராட்டியை அழைத்துப் போன மாதிரி, தானே நேரில் வந்து கைக்கொண்டு போனான்; போகட்டும், அதைப் பற்றி இப்போது நினைக்கவில்லை ; போன இடத்தில் இவளுக்கு மாமியாரான யசோதை இவளுடைய ஸெளந்த்ர்யம் முதலிய குணங்களைக் கண்டு “கிடைக்க பெறாத பேறு பெற்றோம்” என மகிழ்ந்து, கல்யாணப் பெண்ணுக்குச் செய்ய வேண்டிய சீர்மைகளைக் குறைவில்லாமல் செய்வார்களோ அல்லது குறைவாக செய்து விடுவளோ என்று சந்தேகிக்கிறாள்.

புகழால் வளர்த்தேன் என்றது புகழ் உண்டாகும்படி வளர்த்தேன் என்று சொல்வது. செங்கண்மால் என் மகளை இப்படி ரகசியமாகக் கைக் கொண்டு போவதற்கு சமயம் பார்த்து பல இரவுகளில் கண் விழித்ததனால் செங்கண் மால் ஆயினார் என்று விஷேச அர்த்தம் சொல்வதுண்டு. திருவாய்ப்பாடியில் உள்ளார்க்கு எல்லாம் தலைவரான நந்தகோபருடைய தேவி ஆனதால் யசோதை பெருமகள் என்று அழைக்கப்பட்டாள்.  ”என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப்பெற்ற வயிறுடையாள்” (பெரியஆழ்வார் திருமொழி 2.2.6) என்றதால் கண்ணன் பெரும் பிள்ளை என்று கூறப்படுகிறான். மணாட்டு புறம் செய்யும் கொலோ என்று சொன்னது, மணவாட்டிக்கு செய்ய வேண்டிய சீர்களை செய்வார்களோ என்பதை குறித்தாகும்.

கூரத்தாழ்வான் திருநாட்டுக்கு எழுந்தருளிய போது எம்பெருமானார் இந்த பாட்டைச் சொல்லி கதறி அழுதார் என்பது ஐதிஹம்.

Leave a comment