குமரி மணம் செய்து கொண்டு கோலம் செய்து இல்லத்து இருத்தி, * தமரும் பிறரும் அறியத் தாமோதரற்கு என்று சாற்றி, * அமரர் பதி யுடைத் தேவி அரசாணியை வழிபட்டு, * துமிலம் எழப் பறை கொட்டித் தோரணம் நாட்டிடும் கொலோ.
பெரியாழ்வார் திருமொழி 3.8.3
கன்னிப் பெண்ணுக்கு விவாகம் செய்வதற்கு முன்பு செய்யும் விசேஷங்கள் செய்து ஆடை ஆபரணங்களால் அலங்கரித்து விவாக இல்லத்தில் உட்காரவைத்து சொந்தங்களும் மற்றும் உள்ளவர்களும் அறியும்படி தாமோதரனான கண்ணனுக்கு கொடுக்கப் புகுகிறோம் என்று பறை அறைந்து (அதனால்) தவாதி ராஜானுடைய தேவியான இவள் அரசாணியை வலம்வர பெரிய ஆரவாரம் தோன்ற பறையை முழக்கி மகர தோரணம் முதலியவற்றை ஊரெங்கும் நாட்டி அலங்கரித்து கொண்டாடுவார்களோ அல்லது கொண்டாட்டம் எதுக்கு என்று சொல்வார்களோ என்று சந்தேகிக்கிறாள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
கண்ணன், தன் மகளை அழைத்துகொண்டு போனதை பற்றி சிந்தித்துப் பயனில்லை என்று, அந்த சிந்தையை விட்டு விட்டு, மாப்பிள்ளை வீட்டில் உள்ள பெரியவர்கள், இவளுக்கு விவாகமாக செய்ய வேண்டிய மங்கள காரியங்களை நிறைவு பட செய்து, சீர்மை குறையாமல் அலங்காரங்களையும் அமைத்து, மண மாளிகையில் எல்லா மக்களையும் அழைத்து விதிப்படி “இவளைக் கண்ணனுக்குத் தேவியாகத் தருகிறோம்” என்று வெளிப்படையாகச் சொல்லி, பிறகு விவாஹ காலத்தில் அலங்கார பீடத்தின் மேல் நடும் அரச மர கிளையை இவள் வலம் வரும் படி செய்துவித்து, ஊரெங்கும் அலங்கரித்து இப்படி கொண்டாட்டமும் கோலாகலமுமாக இருப்பார்களோ அல்லது, கொண்டாட்டம் எதற்கு என்று ஒன்றும் செய்யாமல் இருப்பார்களோ என்று சந்தேகிறாள்.
Leave a comment