நல்லதோர் தாமரைப் பொய்கை நாண்மலர் மேல் பனி சோர, * அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகு அழிந்தால் ஓத்ததாலோ, * இல்லம் வெறி ஓடிற்றாலோ என் மகளை எங்கும் காணேன், * மல்லரையட்டவன் பின் போய் மதுரைப் புறம் புக்காள் கொலோ.
சென்ற இரண்டு பதிகங்களில், தன்னுடைய மகள், கண்ணனிடம் ஈடுபாடு கொண்டு அவன் மேல் ஆசையினை வளர்த்து, அவனுடன் சேர்ந்து விடவேண்டும் என்று துடிப்பினால், முதலில் தாயானவள் சந்தேகப்பட்டு, பின்பு பல வழிகளில் தானும் அதன் உண்மை தன்மையை அறிந்து, இதனை அறிந்த சொந்தங்களும், ‘இவள் தானாக எம்பெருமானை தேடி ஓடி விடுவதற்கு முன்னர், தாயே அவனிடம் கொண்டு சேர்த்து விட வேண்டும்’ என்று சொல்லியதை பார்த்தோம்.
தாயார் உடனே அப்படி செய்யாமல் இருந்ததனால், எம்பெருமானே வந்து தன் மகளை ‘கள்வன்கொல் யானறியேன் ‘ (பெரியதிருமொழி 3.7.1) என்ற பாசுரத்தில் பிராட்டியை தூக்கி சென்றதை சொன்னவாறு, முந்தானையால் மறைத்து தன்னுடைய திவ்ய தேசமான திருவாய்பாடிக்கு கொண்டு சென்றான் என்கிறார். இங்கே
- தாயார், மகள் காத்து கொண்டு இருப்பதாக நினைத்து இருக்க,
- படுக்கையில் பெண் பிள்ளையை காணாததால், கண்ணனை தவிர இவளை தூக்கி சென்றவன் வேறு எவரும் இல்லை என்றும்,
- அவன் நிச்சயமாக திருவாய்பாடிக்கு தான் அழைத்து சென்று இருப்பான் எனவும்,
- தன் மகள் சென்றதால், தன் திருமாளிகை அழகு இழந்து, வெறிச்சோடி போனது என்றும்,
- இவன் இப்படி அழைத்து கொண்டு சென்றது இந்த குடிக்கு திட்டு வருமோ அல்லது இது நல்லது தானோ, என்று தடுமாறியும்,
- இவளுக்கு திருமணம் நடக்குமோ,
- மாமியாரான யசோதை பிராட்டி இவளை நல்ல மருமகள் என்று கொண்டாடுவாளோ,
- மாமனாரான நந்தகோபர், இவளை ஏற்றுக்கொண்டு, இவள் நல்லவள், இவளை பெற்ற தாய், இவள் இப்படி இங்கு வந்ததானால் உயிர் தரிப்பளோ என்று சொல்லுவாரோ என்றும்,
- கண்ணன் ஒரு சிலரைபோல, தன் மகளை புணர்ந்து, உடன் போவதற்கு மட்டும் என்று வாழ்வானா,
- அல்லது நன்றாக திருமணம் செய்து கொண்டு நாடு நகரம் எல்லாம் போற்றும் படி வாழ்வானா,
- கண்ணன் இவளுக்கு தன்னுடைய பெருமையால் நல்லவை கெட்டவைகளை சொல்லிக் கொடுப்பவனாக இருப்பானோ அல்லது
- தனது பட்ட மகிஷியாக மற்றவர்கள் முன்னே பெருமை தோற்ற வைத்து வாழ்பவனோ,
- அல்லது தயிர் கடைவது போன்ற கடினமான தொழில்களை செய்து தன் மகள் வாழ வேண்டுமோ என்று மனம் கவலையுற்றும்
- அதே சமயம் சில நல்ல நினைவுகளால் மகிழ்ந்தும், தாயின் மனம் நிலை கொள்ளாமல் சென்ற விதத்தை இந்த பதிகம் சொல்கிறது.
பெரியாழ்வார் திருமொழி 3.8.1
அழகியதாய் ஒப்பற்று இருக்கும் தாமரைப் பொய்கையானது அப்போது அலர்ந்த பூவின் மேல், அதுக்கு விரோதியான பனியானது விழ (அதனாலே) உள் இதழும் தாதுக்களும் உதிர்ந்து அழகு அழிந்தார்போல், அகமானது வெற்றிடம் ஆகி விட்டது; என் பெண்ணை எவ்விடத்திலும் காணவில்லை; சாணுர முஷ்டிகர்களை அழித்தவன் பின்னே மதுரைக்கு அணித்தான ஆய்பாடியில் புகுந்தாளோ என்று சந்தேகிக்கிறாள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
என் பெண்பிள்ளையாலே கைவிடப்பட்ட இந்த வீடு, பனி பெய்த்தனால் தாமரைப் பூக்களிலுள்ள இதழ்கள் உதிர்ந்து அதனால் அந்த தாமரை பொய்கை, அழகு அழிந்து தோற்றம் அளிப்பது போல் உள்ளது; இவள் போன இடம் இன்னதென்று தெரியவில்லை: ஒருகால் கண்ணனோடு கூடித் திருவாய்ப்பாடிக்குச் சென்று இருப்பாளோ? என்று திருத்தாயார் ஐயமுற்றுச் சொல்வதாக இந்த பாசுரம் உள்ளது. மதுரைப்புறம் என்பது வடமதுரை என்றும் அது திருவாய்ப்பாடிக்கு புறம் என்றும் சொல்கிறார்.
Leave a comment