காறை பூணும் கண்ணாடி காணும் தன் கையில் வளைகுலுக்கும், * கூறை உடுக்கும் அயர்க்கும் தங் கொவ்வைச் செவ்வாய் திருத்தும், * தேறித் தேறி நின்று ஆயிரம் பேர்த் தேவன் திறம்பி தற்றும், * மாறில் மாமணி வண்ணன் மேல் இவள் மால் உறுகின்றாளே.
பெரியாழ்வார் திருமொழி 3.7.8
பொன்னால் செய்த காறையை கழுத்திலே பூணுகின்றாள்; அது அழகாக இருக்கிறதா என்று கண்ணாடியின் அருகே நின்று பார்க்கின்றாள்; தன் கையில் இருக்கும் வளையை அசைத்துப் பார்க்கின்றாள்; புடைவையை ஒழுங்குபட செய்கின்றாள்; (அவன் வரவை எதிர்பார்த்து இப்படி அலங்கரித்த அளவிலும், அவன் வராததால், ) தளர்கின்றாள்; (மீண்டும் அலங்கரிக்கத் தொடங்கி) கோவை கனி போல சிவந்து இருக்கும் தன் அதரத்தை மிக சிவக்கும்படி செய்து கொண்டாள் ; மிக தெளிவு உடையவளாய் தரித்து நின்று ஸஹஸ்ரநாமங்கள் உடைய தேவனை பற்றி பிதற்றுகிறாள்; ஆகையால் ஒப்பில்லாத நீலமணி போன்ற நிறத்தை உடைய கண்ணன் விஷயத்தில் இவள் பிச்சேறி நின்றாள் என்பது இதன் பொழிப்புரை;
என்மகள்தன் தொண்டையஞ் செங்கனிவாய் நுகர்ந்தானை யுகந்து, (பெரிய திருமொழி 3.7.2) என்று திருமங்கை ஆழ்வார் சொன்னதை நினைவில் கொள்ளலாம்.
Leave a comment