பேசவும் தெரியாத பெண்மையின் பேதையேன் பேதை இவள், * கூசமின்றி நின்றார்கள் தம் எதிர் கோல் கழிந்தான் மூழையாய், * கேசவா என்றும், கேடு இலீ என்றும் கிஞ்சுக வாய் மொழியாள், * வாச வார் குழல் மங்கைமீர் இவள் மால் உறுகின்றாளே.
பெரியாழ்வார் திருமொழி 3.7.7
பரிமளம் வீசுகின்ற நீண்ட கூந்தலை உடைய மடப்பத்தால் முழுமையான பெண்கள், இவளை நிறுத்தும் வகை அறியாது என்னுடைய பெண் பிள்ளை ஒரு வார்த்தை சொல்லவும் முடியாத பெண் தன்மை உடையவளாய் கிளியின் வாய் மொழி போன்ற வாய் மொழியை உடையவளான இவள் அச்சம் மதியம் நாணம் பயிர்ப்பு முதலியவற்றில் தவறாமல் நின்றவர்களுக்கு முன்னே கூசாமல் கோலில் இருந்து நீங்கிய அகப்பை போல (என்னோடு உறவு அற்றவளாக), அழகிய முடியை உடையவளே என்றும் ஒரு கேடும் அற்றவனே (அச்சுதனே) என்றும் சொல்லி பிச்சேறுகின்றாள்;
“பேசவும் தெரியாத“ என்பதற்கு பேச தெரியாத என்ற அர்த்தம் பொருந்தாது. “ஒரு வார்த்தை சொல்லப் பொறுக்க மாட்டாத பெண்மையை உடைய’ அதாவது, தன்னுடைய ஆசாரத்தால் பெண்மைக்கு ஒரு நழுவுதல் வாராதபடி பார்த்து கொண்டு வரும் என்ற அர்த்தத்தை நம் பெரியவர்கள் சொல்வார்கள். பெண்மை என்பது நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்கிற குணங்களாகும். தெரியாத, என்ற வார்த்தைக்கும் இது போலவே, தரியாத என்பதே ஆன்றோர் பாடம்,
பெண்மைக்கு ஏற்ற குணங்களில் ஒன்றுக்கும் ஒரு கேடும் விளையாதபடி மரியாதையான முறையில் தான் ஒழுங்குபட நிற்பதும் தவிர அந்த குணங்களுக்குக் கெடுதி விளைந்ததாக ஒருவர் ஒரு பேச்சு பேசினால் கூட அதனை கேட்டு சகித்துகொள்ள மாட்டாத எனது பெண்பிள்ளை, இன்று செய்ததை பார்த்தால், முன்பு இருந்த நிலைக்கு எதிராக உள்ளது. அது ஏன் எனில், இன்று வரை அடக்கத்துடன் ஒடுங்கி இருந்த, இவள் இன்று காம்பை விட்டு நீங்கின அகப்பை போல், தாயாகிய என்னை விட்டு அகன்று கூச்சமின்றித் தெருவில் புறப்பட்டுக் கண்ணன் பெயர்களைக் கூவி அழைத்து அவன் வரவைக் காணாமல் மயக்கம் அடைகின்றாள். கோல்கழிந்தான் மூழை ஆய். என்பது கோல் கழிந்த மூழையாய் என்ற அர்த்தத்தில் வருகிறது. கிஞ்சுகம் என்றால் கிளி, வாசம் என்பது வாசனை என்ற பொருளில் வருகிறது.
Leave a comment