ஞால முற்றும் உண்டு ஆலிலைத் துயில் நாராயணனுக்கு இவள், * மாலதாகி மகிழ்ந்தனள் என்று தாயுரை செய்ததனை, * கோலமார் பொழில், சூழ் புதுவையர்கோன் விட்டுசித்தன் சொன்ன, * மாலை பத்தும் வல்லவர்கட்கு இல்லை வருதுயரே.
பெரியாழ்வார் திருமொழி 3.7.11
பூமி முதல் சகல லோகங்களையும் பிரளயத்தில் அழியாதபடி திருவயிற்றில் வைத்து ஒரு ஆலந்தளிரிலே கண் வளர்ந்து அருளின நாராயணன் விஷயத்தில் மிக்க ஆசையை உடையவளாய் மகிழ்ந்தாள் என்று திருத்தாயார் சொன்னதை அழகு மிகுந்து பொழிலால் சூழப்பட்ட ஸ்ரீ வில்லி புத்தூரில் உள்ளவர்க்கு நிர்வாககரான பெரியாழ்வார் அருளி செய்த சொல் மாலையான பத்துப் பாட்டையும் ஓத வல்லவர்களுக்கு பகவத் அனுபவத்திற்கு விரோதியாய், வருவதோறு துக்கம் உண்டாகாது என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
இந்த பெண் பிள்ளை, எல்லா உலகங்களையும் தன்னுடைய திருவயிற்றில் வைத்து காத்து ஒரு ஆலந்தளிரில் கண் வளர்ந்து அருளின எம்பெருமானுடைய விஷயத்தில் மோகத்தை உடையவளாய் அவனை அணைக்க வேண்டும் என்ற ஆசையினால், மனம் உகந்தாள் என்று தாய் சொல்லியதை அழகு நிறைந்த சோலைகளை கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூருக்கு நிர்வாககரான ஆழ்வார் அருளி செய்த நூல் மாலையாகிய இந்த பத்து பாடல்களையும் ஓத வல்லவர்களுக்கு வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை என்று சொல்லி இந்த பதிகத்தை இனிதே நிறைவு செய்கிறார்.
Leave a comment