பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து பேணி நம் இல்லத்துள்ளே, * இருத்துவான் எண்ணி நாமிருக்க இவளும் ஒன்று எண்ணுகின்றாள், * மருத்துவப் பதம் நீங்கினாள் என்னும் வார்த்தை படுவதன் முன் * ஒருப்படுத்திடுமின் இவளை உலகளந்தானிடைக்கே.
பெரியாழ்வார் திருமொழி 3.7.10
மிகப் பெரிய கல்யாணங்களை பண்ணி குல மரியாதையை பேணி, நம் வீட்டினுள் இவளை இருத்துவதாக நாம் நினைத்து இருக்க இந்த பெண் நம் எண்ணத்திற்கு மாறாக ஒன்றை எண்ணுகிறாள்.(என்று தாயார் சொல்ல, இதை கேட்ட சொந்தங்கள்) ‘வைத்தியன், செய்யும் மருந்தில் பாகம் பார்த்து செய்யாத போது, அது கை தவறுமா போலே, இவள் பதம் பார்த்து, நாம் செய்யாமையால் கை கழிந்தாள் ‘ என்ற வார்த்தையானது இந்த உலகத்தில் உண்டாவதற்கு முன்னே, உலகத்தை நீர் ஏற்று அளந்த இவனிடத்தில் இவளை சேர்த்து விடுங்கள் என்கிறார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
இந்த பெண்ணுக்கு அந்த அந்த காலங்களில் செய்ய வேண்டிய மங்கள காரியங்களை விசேஷமாக செய்து மிக்க அன்பு பாராட்டி நம் வீட்டிலேயே இவளை வளர்ப்பதாக நினைத்திருக்கும் நமது நினைவுக்கு நேர் எதிராக இவள் புறப்பட்டு ஓடுவதாக நினைத்திருக்கின்றாளே என்று கலங்கி கூறின தாயை நோக்கி, அவளுடைய சொந்தங்கள், அப்படியானால் இவளை இப்போதே கண்ணனிடத்தில் கொண்டு போய் சேர்த்து விடுவதே சிறந்தது. இல்லாவிடில் மருந்ததுவன், தான் செய்கிற மருந்தினை பாகம் பார்த்துச் செய்யாதபோது, அம்மருந்து கை தவறிப் போவது போல, இவள் போனாள் என்று பெரியதொரு அபவாதம் பரவி விடும் என்று கூறுவதாக அமைந்த பாடல்.
Leave a comment