பொங்கு வெண் மணல் கொண்டு சிற்றிலும் முற்றத்து இழைக்கலுறில், * சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லும் அல்லது இழைக்கலுறாள், * கொங்கை இன்னம் குவிந்தெழுந்தில கோவிந்தனோடு இவளை * சங்கையாகி என் உள்ளம் நாள்தொறும் தட்டுளுப்பாகின்றதே.
பெரியாழ்வார் திருமொழி 3.7.3
முற்றத்தில் நுண்ணிய வெளுத்து இருக்கும் மணலைக் கொண்டு சிற்றிலை (கொட்டகத்தை) அமைக்க முயன்றாள் என்றால் அது ஸ்ரீ பாஞ்ச ஜன்யமாகவும், திருவாழியாழ்வானாகவும், கௌமோதகி என்ற கதையாகவும், நந்தக வாள் ஆகவும், ஸ்ரீ சாரங்கம் என்ற வில்லாகவும் வருகிறதே தவிர வேறு எதுவும் இழைக்க நினையாள் ; (இவளுக்கு இஷ்டம் இல்லை என்பதும், நிற்பந்தத்தால் செய்கிறாள் என்பது தெரிகிறது); முலைகள் இன்னும் திரண்டு எழ வில்லை; பசு மேய்க்கும் (நீர்மை / எளிமை உடையவனான) கண்ணனோடே, ‘இவளுக்கு கலவி உண்டாக்கி இருக்க வேண்டும் ‘ என்ற சந்தேகம் நாள் தோறும் என் மனதில் எழுந்து தடுமாற்றம் தருகின்றது என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
மகளை வெளியில் புறப்பட விட்டால் அல்லவோ இவள் களவு புணர்ச்சி ஆடி வருகின்றாள், இனி உள் முற்றத்தில் இருந்து கொண்டே விளையாடச் சொன்னால், இவள் முற்றத்தில் வெண்மணல்களை கொண்டு சிற்றில் அமைக்க முயன்றாலும், எம்பெருமானது அழகுக்கும் விரோதிகளை அழிப்பதற்க்கும் உள்ள பஞ்சாயுதங்களை உருவாக்குகிறாளே தவிர வேறு ஒன்றும் செய்வதில்லை; தலைமகனை வசப்படுத்துதற்கு முக்கிய சாதனமான முலைகளோ, ‘முலையோ முழு முற்றும் போந்தில‘ (திருவிருத்தம் 6) என்று சொன்னது போல, இன்னும் வளரவில்லை. இப்படி இவளது இளமையைப் பார்த்தால் “தலைமகனோடு இவள் இணங்கினாள்” என்று சொல்ல முடியவில்லை; இவள் செய்கைகளை பார்த்தால் சந்தேகிக்கும்படி உள்ளது; ஆகையால் ஒன்றையும் தன்னால் நிர்ணயிக்க முடியாமல் என் நெஞ்சு தடுமாறுகிறது என்று தாய் கூறுகிறார்.
Leave a comment