திவ்ய பிரபந்தம்

Home

3.7.2 வாயில் பல்லும் எழுந்தில

பெரியாழ்வார் திருமொழி 3.7. 2

வாயில் பற்களும் எழவில்லை; தலைமுடியும் சேர்த்து கட்டும்படி கூடவில்லை; இப்படிப்பட்ட தன்மையான என் பெண், ஒடுக்கம் இல்லாதவர்களாய், (தாய்க்கு அடங்காத) தன்மையில் தலை நின்ற சில பெண்களோடு சேர்ந்து பொல்லாத இணக்கத்தோடே கலந்து வந்து, இவள் இப்படி செய்து வந்த தன்னோடு ஒத்த செம்மையை சொல்லிக்கொண்டு (அதனுடன் சேராதபடி, அவனுடைய குண விசேஷங்களையும் வடிவழகையும் சொல்லி), ஆச்சரியமான விளையாட்டுக்களை செய்ய வல்லவனான நீல மணி போன்ற நிறத்தை உடையவன் மேல் பித்து பிடித்து நின்றாள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

இளம் பருவத்தில் இருந்தாலும், தாய்க்கு அடங்காத சில பெண்களோடு சேர்ந்து அதன் மூலமாக பகவத் விஷயத்திலே ஊன்றி, அதனை மறைப்பதற்காகச் சில பொய்களைப் பேசி,  ‘கண்ணா! மணிவண்ணா!’ என்று இடைவிடாது வாய் வெருவுகின்றாள் என்று கூறுகிறார்.

குறுந்தலை என்று சொன்னது, நீசர் வகுப்பில் முதலில் நின்றது போல என்கிறார். வாயில் பற்கள் எழவில்லை; தலைமுடியும் சேர்ந்து முடிக்கும்படி வளரவில்லை; இப்படிபட்ட இவள், ஒடுக்கம் இல்லாதவர்களாய், சில குறுந்தலை பெண்களோடு கூடி, பொல்லாத இணக்கத்தோடு (களவு புணர்ச்சி) கலந்து வந்து, எங்கு போனாய், என்ன செய்தாய் என்று கேட்டால், தனக்கு பொருத்தமான வார்த்தைகளை, கபடமற்ற வார்த்தைகள் போல சொல்லி, இவள், அற்புத செய்கைகளையும், நீல மணி நிறத்தையும் உடைய கண்ணன் மேல் மோகம் கொண்டு இருக்கிறாள் என்கிறார்.

Leave a comment