திவ்ய பிரபந்தம்

Home

3.7.1 ஐய புழுதி உடம்பு அளைந்து

போகத்தில் வழுவாத புதுவையர் கோன் என்ற சொல்லுக்கு ஏற்றபடி, கிருஷ்ணாவதாரத்தின் குணாதியங்கள் ஒன்று விடாமல் இதுவரை ஆழ்வார் அனுபவித்து கூறியுள்ளார். மற்ற ஆழ்வார்கள் போல எம்பெருமானுடைய சௌந்தர்ய குண விசேஷத்தை பாட விரும்பிய ஆழ்வார், தன்னிலை மறந்து, ஒரு கன்னி கோபிகையின் அவஸ்தையை அவள் தாயார் பேசுவதாக இந்த பதிகத்தில் விவரிக்கிறார்.

அதாவது, பருவம் நிரம்புவதற்கு முன்பே, கிருஷ்ண விஷயத்தில் அதிக ஆர்வம் உள்ளவளாகவும், இவள் இளமையிலேயே அவனுடன் சேர்ந்து வருகிறதையும் இவள் கண்ணனுடன் செய்யும் லீலைகளை பற்றி பேசும் போது, அவனுடைய சின்னங்களை மட்டுமே பேசி, மற்ற ஒன்றினையும் அறியாதவளாக இருப்பதையும், இவை எல்லாவற்றிக்கும் மூல காரணமாக அவளுடைய தோழிகள் அவளை கிருஷ்ணனிடம் அழைத்து சென்றதையும், இவள் இப்படி பேசும் போது, அவர்களுடைய சொந்தங்கள் பேசுவதையும், மற்றவர்கள் பேசும் வார்த்தைகளையும் ஆழ்வார் இந்த பதிகத்தில் விவரிக்கிறார்.

பெரியாழ்வார் திருமொழி 3.7.1

இளம் பருவத்தில் உள்ள என் பெண் தன் உடம்பெல்லாம், அழகிய புழுதி ஆகும்படி, புழுதியில் அளைந்து (விளையாடியதால் உடம்பு முழுவதும் புழுதி என்று சொல்லாமல்) இவள் தன் சொல்லும் கலங்கி இருப்பதோடு மட்டுமின்றி, சிவந்த நூலாலே தைத்த சிற்றாடையை ஒழுங்குபட உடுக்கவும் தெரியாதவளாய், கையில் இருக்கும் தானம் பெற்ற (மண் சோறு ஆக்கும்) சிறிய தூதையோடு சிறு சுளகையும் பிரிந்து விடுவதும் செய்ய வில்லை; இப்படிப் பட்ட பருவத்தில் உள்ள இவள் படத்தை உடைய திருவனந்தாழ்வான் ஆகிற அணையை திருப்படுக்கையாக உடையவனோடு கை கலந்து வருகிறாள் என்று ஒரு பிராட்டி பேசியதை ஆழ்வார் தாய் பாசுரத்தால் பாடுகிறார் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

தலைமகனை வசப்படுத்துவது உடல் அழகு, உரை அழகு, உடை அழகு என்று இருக்கும் போது, உடலும் புழுதி படிந்து, சொல்லும் திருத்தமற்ற குளறுகிற சொற்களாய், ஆடையும் ஒழுங்குபட உடுக்காமல் இருக்க, இப்போதைக்கு தலைவனோடு கை கலந்து வருவது எப்படி என்று ஒரு தாய் ஆச்சரியம் அடைகிறார்.

தூதை என்பது மகளிர் மணலில் விளையாடும்போது மணலால் சோறு சமைப்பதாகப் பாவனை செய்வதாகும். இப்பாட்டில் “இவள்” என்ற சுட்டுப்பெயர் மூன்று தடவை பிரயோகித்தது ஏன் எனில், பந்து, கழல், அம்மானை என்று இல்லாமல், பருவத்துக்கும் செயலுக்கும் பொருத்தம் இல்லாத, உடை, சொல் மற்றும் செயல் ஆகும்.

Leave a comment