திவ்ய பிரபந்தம்

Home

3.6.9 திரண்டு எழு தழை

பெரியாழ்வார் திருமொழி 3.6.9

(மழைக்காலத்தில்), திரண்டு மேல் எழுந்து தழைத்து இருக்கிற காளமேகம் போன்ற திரு நிறத்தை உடைய, செந்தாமரைப் பூவை சூழ்ந்து இருக்கும் வண்டுகளின் கூட்டம் போல, சுருட்சியும் இருட்சியும் உடைய குழல் தாழ்ந்து உள்ள திருமுகத்தை உடையவன் ஊதுகிற குழல் ஓசை காதில் பட, மான் கூட்டங்கள், அறிவழிந்து, மேய்ச்சலையும் மறந்து, மேயக் கவ்வின புல்லும் கடை வாய் வழியே நழுவி விழ முன்னும் பின்னும் அசையாமல், பக்கங்களிலும் அடி பெயராமல், (சுவரில்) எழுதப்பட்ட சித்திரங்களைப் போல ஒரு செயல் இல்லாமல் நின்றன என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

கண்ணன் குழல் ஊதும் போது அவனது திருமுக மண்டலத்தின் மேல் திருக்குழல்கள் தாழ்ந்து அசைந்தன என்றும், அது செந்தாமரைப் பூவில் வண்டுகள் படிந்திருப்பது போல இருக்கும் என்கிறார். மனிதர்கள் காட்டு வழியில் அகப்பட்டு திருடர்கள் கையில் அடியுண்டு, அறிவு அழிவதை போல, மான் கூட்டங்கள் இந்த குழல் ஓசையால் வலை விரித்து இருந்த வழியில் சென்று அகப்பட்டு, குழல் ஓசையின் இனிமையால், மெய் மறந்து அறிவு அழிந்து போகவே, புல் மேயாமல் ஒழிந்தது மட்டும் இல்லாமல், மென்று தின்பதற்காக வாயில் கவ்வியிருந்த புல்லும் உறங்குபவன் வாயில் உள்ள பண்டம் போல் தானாகவே கடைவாய் வழியாக வெளியில் நழுவி வந்து விழுந்தன; அது மட்டும் இல்லாமல், நின்ற இடத்தில் நின்றும் ஒரு மயிரிழை அளவும் அசையால் சுவரில் எழுதப்பட்ட சித்திரப் பதுமைகள் போலத் திகைத்து நின்றன என்கிறார்.

Leave a comment