திவ்ய பிரபந்தம்

Home

3.6.8 சிறு விரல்கள் தடவிப்

பெரியாழ்வார் திருமொழி 3.6.8

சிறுத்து இருந்துள்ள திரு விரல்கள் தடவிக்கொண்டு, அங்கும் இங்கும் செல்லும்படியும், சிவந்த கண்கள் வளையும்படியும், சிவந்த திருப்பவளமானது குமிழ்ந்து இருக்கும் படியும், வியர்வை அரும்பினபடியும், திருப்புருவமானது மேலே கிளர்ந்து வளையும் படியும் கோவிந்தனானவன் திருக்குழலைக் கொண்டு ஊதின போது, பறவைகளின் கூட்டம் தங்கள் தங்களுடைய கூட்டை விட்டு கண்ணன் பக்கத்தில் வந்து சூழ்ந்துகொண்டு வெட்டி விழுந்த காடு போல் மெய் மறந்து கிடக்க, பசுக்களின் கூட்டம் கால்களை பரப்பி, தலைகளை தொங்க விட்டு, காதுகளை அசைக்காமல் நின்றன என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

செவியை அசைத்தால் அது இசைக்கு உகந்தது அல்ல என்று செவியை அசைக்காமல் இருந்தன என்கிறார்.

குழலூதும்போது குழலின் துளைகளில் புதைக்க வேண்டியது, புதைத்துத் திறக்க வேண்டியது, திறக்கைகாக அவற்றைக் கைவிரல்களால் தடவுதலும், கண்கள் ஓர் வகையாக மேல் நோக்கி வைத்து இருப்பதும், இரண்டு கடைவாயைகளையும் குவித்துக் கொண்டு ஊதுகிற போது வாயினுள் உள்ள வாயுவின் பூரிப்பாலே வாய் குமிழ்த்து தோற்றுதலும், புருவங்கள் மேல்நோக்கி வளைதலும் குழல் ஊதுவார்க்கு, இன்றியமையாத இயல்பு ஆகும்.

இப்படி கண்ணன் குழலூத, அதன் ஓசையைக் கேட்ட பறவைகள் தாம் இருக்கும் கூடுகளை விட்டு வெளியே வந்து, காட்டில் வெட்டி வீழ்ந்த மரங்கள் போல் ஆடாது அசையாது நிலத்தினில் விழுந்து கிடந்தன; அப்படியே பல பசுக்கூட்டங்களும் மெய் மறந்து கால்களைப் பரப்பிக் கொண்டும் தலையைத் தொங்க விட்டுக் கொண்டும் உயிர் இல்லாத பொருட்கள் போலத் திகைத்து நின்றன; உயர்திணைப் பொருள்களோடு அஃறிணைப் பொருள்களோடு வித்யாசம் இல்லாமல், எல்லாப் பொருள்களும் ஈடுபட்டு மயங்குமாறு கண்ணன் குழல் ஊதினான் என்கிறார்.

Leave a comment