புவியுள் நான் கண்டது ஒர் அற்புதம் கேளீர் பூணி மேய்க்கும் இளங் கோவலர் கூட்டத்து, * அவையுள் நாகத்தணையான் குழலூத அமர லோகத்தளவும் சென்று இசைப்ப, * அவி உணா மறந்து வானவர் எல்லாம் ஆயர் பாடி நிறையப் புகுந்து ஈண்டி, * செவி உணாவின் சுவை கொண்டு மகிழ்ந்து கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே.
பெரியாழ்வார் திருமொழி 3.6.7
இந்த பூமியில் நான் கண்டதோரு ஆச்சரியத்தை கேளுங்கோள் ; கன்றுகள் மேய்கிற ஆயர்குல பாலர்கள் அதிகம் உள்ள கூட்டத்தில் திருவனந்தாழ்வான் மேலே பள்ளிகொண்டு அருளுகின்ற சர்வேஸ்வரன் திருக்குழலை ஊத (அதன் சப்தமானது) தேவ லோகம் அளவும் சென்று ஒலிக்க எல்லா தேவர்களும், அந்தணர் தங்களுக்கு அளிக்கும் ஹவிஸ்தனை உண்ண மறந்து, திருவாய்ப்பாடியானது நிறையும்படி வந்து நெருங்கி செவியின் உள் நாவாலே குழலோசையின் இனிய ரசத்தை உட்கொண்டு உள்ளஅம் களித்து பசு மேய்க்கும் கண்ணனை பின் தொடர்ந்து ஒரு நொடி கூட விட முடியாதவர்களாக இருந்தார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
இந்த பூமியில், பிறர் வாயால் கேட்டது மட்டுமின்றி, நேரடியாக பார்த்த அதிசயத்தை கூறுகிறேன். திருக்குழல் ஊதி பசுக் கூட்டங்களை மேய்த்து திரியும் இடையர் கூட்டத்திலே ஆதிசேஷன் மேல் சாய்ந்து இருக்கும் பரமாத்மாவான எம்பெருமான் குழல் ஊத, அந்த ஓசை மேல் உலகத்து அளவில் சென்று ஒலிக்க, தேவர்கள் எல்லாம், தங்களுக்கு உணவான யாகங்களில் கிடைக்கும் கவிஸ்களை மறந்து, (தேவாமிர்தத்தை மறந்தார்கள் என்று சொல்லவில்லை, ஹவிஸ் அவர்களின் பெருமைக்கு கிடைக்கும் சன்மானம் ஆகையால் இதை சொல்கிறார், மேலும் இது அவர்கள் மிகவும் விரும்பி ஏற்று கொள்வதால், இதனை இங்கே சொல்கிறார்), பொதுவாக மனிதர்கள் வாசனை பிடிக்காது என்பதால், பூமிக்கு வர மறுக்கும் தேவர்கள், கண்ணன் பிறந்து வளர்ந்து வரும் ஊர் என்பதால் திருவாய்பாடிக்குள் புகுந்து, திரண்டு வந்து, செவிக்குள் குழல் இசையின் இனிய ரசத்தை உண்டு, ஆனந்தம் கொண்டு, பசுக்களை காத்து வரும் கண்ணனை, அவன் செல்லும் இடங்களுக்கு எல்லாம் அவனை விடாமல் தொடர்ந்து செல்கிறார்கள் என்கிறார்.
எல்லாவற்றையும் அடைந்த கண்ணன், பசுக்களின் மத்தியில் அவர்களுடன் ஒருவனாக, குழல் ஊதுவதையும், அந்தககுழல் ஓசை தேவலோகம் வரை செல்வதும், அதைக்கேட்டு தேவர்கள் எல்லாம், தாங்கள் விரும்பி இருக்கும் ஹவிர் போஜனத்தை மறந்து இருப்பதும், அது மட்டுமின்றி, மனித வாசனையே பிடிக்காதவர்கள், திருவாய்பாடியில் திரண்டு வந்து இருப்பதையும், இந்த குழல் ஓசையின் ரசத்தை உண்டு, ஆனந்தித்து, அவனை விடாமல் பின் தொடர்ந்து செல்வது என்று எல்லாமே நடக்க முடியாதவைகளாக இருந்தும், இதற்கு முன்பு இந்த லோகத்தில் கண்டு அறியாதது என்பதாலும், ‘புவியுள் நான் கண்டதோர் அற்புதம் கேளீர்‘ என்கிறார்.
Leave a comment