திவ்ய பிரபந்தம்

Home

3.6.6 செம் பெருந்தடங் கண்ணன்

பெரியாழ்வார் திருமொழி 3.6.6

சிவந்ததாய் மிகவும் பெருத்து இருந்துள்ள திருக்கண்களை உடையவனாய், (மூங்கில் போல்) திரண்டு இருக்கிற, திருத்தோள்கள் உடையவனாய், தேவகிப் பிராட்டிக்கு மகனாய், தேவர்களுக்கு சிங்கமாய், நமக்கு தன் பெருமை எல்லாம் அறியலாம்படி இருக்குமவன் அன்று திருக்குழல் ஊதும் போது (அந்த குழல் ஓசையைக்) கேட்டவர்கள் இடர் உற்றவற்றை கேளுங்கள்; ஆகாயத்திலே திரிகின்ற கந்தர்வ ஜாதியர் எல்லோரும் அமிர்தம் போல இனிய இசையாகிற வலையாலே கட்டுண்டு நம்மால் இனிப்பாட முடியாது என்று முன்பு எல்லாம் படியதற்கும் வெட்கப்பட்டு மயங்கி மனதை உடைத்து சரீரமும் கட்டுக்குலைந்து இனி நாம் ஒன்றுக்கும் பயன் இல்லை என்று கையை மடக்கிக் கொண்டு நின்றார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

கண்ணன் ஊதின குழலின் ஓசை செவியில் விழப் பெற்ற கந்தர்வர்கள், பட்ட பாட்டை இந்த பாட்டில் கூறுகிறார். பரம போக்யமான இந்த குழல் ஓசையாகிற வலையிலே அவர்கள் கட்டுப்பட்டு, “இனி நாம் பெரும் சுமையாகின்ற இந்த பாட்டு பாடும் தொழிலை விட்டு வந்து விடலாம், என்று நிச்சயித்தது மட்டும் இன்றி, இதற்கு முன் தாம் பாடித் திரிந்ததை நினைத்து அதற்காகவும் வெட்கப்பட்டு, மேல் ஒன்றும் நினைக்க முடியாதபடி அறிவையும் இழந்து உடலும் மனமும் சோர்ந்து இதை சொல்லவும் வல்லமையற்று “இனி நாங்கள் ஒன்றும் செய்ய போவதில்லை” என்பதை ஊமையர் போல செய்கை செய்து காட்டி நின்றார்கள் என்கிறார்.

Leave a comment