குழல் இருண்டு சுருண்டு எறிய குஞ்சிக் கோவிந்தனுடைய கோமள வாயில், * குழல் முழைஞ்சுகளின் ஊடு குமிழ்த்துக் கொழித்திழிந்த அமுதப் புனல் தன்னை, * குழல் முழவம் விளம்பும் புதுவைக்கோன் விட்டு சித்தன் விரித்த தமிழ் வல்லார், * குழலை வென்ற குளிர் வாயினராகிச் சாது கோட்டியுள் கொள்ளப் படுவாரே.
பெரியாழ்வார் திருமொழி 3.6.11
சுருண்டி ருண்டகுழல் தாழ்ந்த முகத்தான் (பெரியாழ்வார் திருமொழி 3.6.9)ல் சொன்னபடி, திருநெற்றியில் தாழ்ந்த குழலை உடையவனாய், கறுத்து சுருண்டு, மேலே நெடுக வளர்ந்த மயிர் முடியை உடையவனாய், பசு மேய்க்கும் கண்ணனுடைய அழகிய திருப்பவளத்தில் திருகுழலின் துளைகளின் வழியே, கிளர்ந்து அலை எறிந்து எழுந்த அமிர்த ஜலத்தை குழலின் ஓசையாக சொன்ன ஸ்ரீ வில்லி புத்தூருக்கு நிர்வாககரான பெரியாழ்வார் விரிவாகச் சொன்ன தமிழ் பாட்டுக்களான இவற்றை ஓத வல்லவர்கள், குழல் ஓசையின் குளிச்சியை வென்ற குளிர்ந்த சொல்லை உடையவராய் கொண்டு சாதுக்களின் கோஷ்டியில் அங்கீகரிக்கப் படுவார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
குழல் என்றாலும் குஞ்சி என்றாலும் பொருள் கேசம் என்பதே. கண்ணனுடைய வாய் அமுதமானது, குழலூதும் போது அதன் துளைகளிலே நீர்க்குமிழி போலக் குமிழ்த்து உடனே அது திவலையாகத் திரிந்து பரந்ததனை கூறுகிறார். அந்த வாய் அமுதத்தை பெரியாழ்வார் தாம் குழலினுடைய ஓசையின் போன்றே அப்படிப்பட்ட சொற்களால் அருளிச் செய்கிறார். கண்ணன் குழலூதினதை நன்றாக ரசித்து பாடி உள்ளார் என்பது கருத்து. இப்பாசுரங்களைப் பயில்பவர்கள் பரம யோக்யமாக சொல்ல வல்லமை பெற்று, சத்வ குணங்கள் உள்ளவர் குழுவினில் புகப்பெறுவர் என்று பலன் சொல்லி இந்த பதிகத்தை முடிக்கிறார்.
Leave a comment