திவ்ய பிரபந்தம்

Home

3.6.10 கருங்கண் தோகை மயிற் பீலி

பெரியாழ்வார் திருமொழி 3.6.10

கறுத்த கண்களை உடைய இறகுகள் மயில் பீலிகளை திருமுடியில் சாத்திக்கொண்டு நன்றாக அழுந்தச் சாத்தின திருப்பீதாம்பரமும் பெறுதற்கு அரிய திரு ஆபரணங்களையும் உடைய திருமேனி உடையவனாய் இடையர்களுக்கு எல்லாம், தலைவனாய், ஒருவன் குழல் ஊதின போது, மரங்கள் ஒருபடிப்பட நின்று மது தாரைகளை கொட்டும்; கவம்பில் நிற்கும் பூக்கள் எல்லாம், நிலை குலைந்து விழும். மேலே வளர்கின்ற கொம்புகள் கீழே படியும். தன் நிலை குலைந்து நிற்கும். (அஞ்சலி செய்பவர்கள் போல் தாழ்ந்த கொம்புகளை) குவித்து நிற்கும். அந்த மரங்கள் செய்யும் குணம் எப்படி என்று ஆச்சர்யபடுவது இந்த பாடலின் பொழிப்புரை.

கண்ணன் குழலூதும் போது, தேவ, மனுஷ்ய, மிருகக் கூட்டங்கள் உருகியதைப் போல, அறிவுக்கு யோக்கியதையே இல்லாத மரங்கள் உருகி செய்தவைகளை விரித்து உரைக்கின்றார். கண்ணன் குழலூதிக் கொண்டு நிற்கும் பக்கங்கள் பல உண்டு; அவற்றுள் ஒரு பக்கத்தில் மகரந்த மரத்தையும் , மற்ற பக்கத்தில் மலர்கள் கொடுக்கும் மரங்கள், கொடிகள் போன்றவற்றையும் வேறொரு பக்கத்தில் கிளைகளைத் தாழ்த்தி நிழலை கொடுக்கும் மரங்களையும், குறிப்பிட்டு, அவை தாங்களாவே உருகி நிற்கும்; எங்களுக்கு அருள் செய்ய வேண்டும் என்று அஞ்சலி பண்ணுவது போலக் கொம்புகள் நிற்கும். இப்படி மரங்கள் கண்ணன் திரும்பும் பக்கம் திரும்பி இருப்பதை பார்த்து, யான் என்ன என்று கூறுவேன் என்கிறார்.

Leave a comment