திவ்ய பிரபந்தம்

Home

3.6.5 முன் நரசிங்கம் அதாகி

பெரியாழ்வார் திருமொழி 3.6.5

முற்காலத்தில், நரசிம்ம வடிவம் கொண்டு, ஹிரண்யாசுரனுடைய மேன்மையை அழித்தவனாய், மூன்று லோகங்களிலும் உள்ள அரசர்களும் தன் மதிப்பைக் கண்டால் உள்ளம் நடுங்கும்படியாக இருக்கிற மது என்ற அரக்கனை அழித்து அருளிய கண்ணன், (மதுசூதனன்) திருப்பவளத்தில் வைத்து ஊதின திருக்குழலின் ஒலியானது காதினை பிடித்திழுக்க நல்ல வீணை நரம்பை உடைய தும்புரு என்ற ரிஷியோடு, நாரத மகரிஷியும் தங்கள் தங்களுடைய வீணையை மறந்து (அதுவும் அன்றிக்கே) கின்னர மிதுனங்கள் என்று சொல்லப்படுபவர்கள், தம் தம் கின்னரங்களை இனித் தொட மாட்டோம் என்று சொல்வது என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

வீணை வித்தையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற தும்புரு நாரதர்கள் கண்ணனது குழலோசையைக் கேட்ட பிறகு, அதிலே ஈடுபட்டுத் தமது வீணைகளை மறந்தனர்; கின்னர மிதுனங்கள் என்று புகழ் பெற்றிருக்கும் பேர்களும் இக்குழலோசையைக் கேட்டுத் தோற்றதாகக் ஒப்புக் கொண்டு, “இனி நாங்கள் எங்கள் கின்னரங்களை தொடுவதில்லை, ஆணை ” என்று உறுதியாக உரைத்தனர்.

தேவாதி மற்றும் நான்கு வித மனிதபிரிவுகள் என்று ஒன்றாலும் அழிக்கப்படக் கூடாது என்று வரம் வாங்கியதை சரிசெய்வதற்காக மனித, சிங்க வடிவங்களை சேர்த்து, ஒரு வடிவாககொண்டு வந்ததை, ‘அதாகி‘ என்பதால் சொல்கிறார். மனித சிங்கம் வடிவங்கள் ஒன்றோடு ஒன்று சேராதவை என்றாலும், ‘அழகியான் தானே, அரிவுருவும் தானே‘ (நான்முகன் திருவந்தாதி 3.2) என்றபடி இருக்கும் அழகின் அதிசயத்தை சொல்கிறது.

எல்லை இல்லாத வரங்களை பெற்று அதன் மூலம் அமரர்கள் உட்பட எல்லோரையும் அல்லல் செய்து, தானே உலகத்துக்கு எல்லாம் முக்கியம் என்றும், எம்பெருமான் திருநாமம் கேட்க பொறுக்காமல், தன் பிள்ளை என்றும் பாராமல், அவனுக்கு துன்பங்கள் செய்த, ஹிரண்யாசுரனை பிரஹ்லாதாழ்வானுக்காக நரசிங்க உருவாய்த் தூணில் தோன்றி கிழித்த வரலாறு சொல்லப்பட்டது.

Leave a comment