தேனுகன் பிலம்பன் காளியன் என்னும் தீப்பப் பூடுகள் அடங்க உழக்கி * கானகம் படி உலாவி உலாவிக் கரும் சிறுக்கன் குழலூதின போது * மேனகையோடு திலோத்தமை அரம்பை உருப்பசி அரவர் வெள்கி மயங்கி * வானகம் படியில் வாய் திறப்பின்றி ஆடல் பாடல் இவை மாறினர் தாமே.
பெரியாழ்வார் திருமொழி 3.6.4
தேனுகாசுரன், ப்ரலம்பாசுரன், காளிய நாகன் என்று சொல்லப்படும் கொடியவைகளான பூண்டுகளை எல்லாம் அழித்துவிட்டு காட்டிலே இயற்கையாகவே (தன் விருப்பப்படி நின்று) நெடுங்காலம் சஞ்சரித்து கரிய திருமேனியை உடையவனாய், இளம் பிள்ளையான கண்ணன், குழல் ஊதின போது, மேனகையுடன் திலோத்தமை, ரம்பை, ஊர்வசி முதலியவர்கள் வெட்கப்பட்டு, (இவன் ஊதும் குழல் ஓசையில் ஈடுபட்டு) மயங்கி, தேவலோகத்திலும் பூலோகத்திலும் வாய் திறவாமல் தாங்களே, ஆடலும் பாடலும் ஆகிற இவற்றை தவிர்த்து விட்டார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
கானகம் என்றது பிருந்தாவனத்தை என்று கொள்க. அங்கு கண்ணன், ஊதுகின்ற குழலின் இசையைக் கேட்ட மேனகை முதலிய மேல் உலக மாதர்கள் “இனி நாம் ஆடுவது என்ன ஆவது, பாடுவது என்ன ஆவது ” என்று நாணம் கொண்டு தாமாகவே அவற்றை தவிர்த்தனர். எனவே கண்ணனுடைய புல்லாங்குழல் வாசிக்கும் திறமை விளங்கும். தேவ மாதர்கள் ஆடுவது போன்ற நடை அழகையும், அவர்கள் பாடுவது போன்ற பாட்டின் இன்பத்தையும் கண்ணனது நடையழகும் குழலோசையும் வென்றன என்கிறார். இனி நாம் வானிலும் நிலத்திலும் ஆட, பாட என்று வாயாலும் சொல்லக் கூடாது” என்று தங்களுக்குள்ளே ஆணையிட்டு கொண்டார்கள் என்கிறார்.
தேனுகன், கழுதையின் வடிவம் கொண்டு வந்த அஸுரன்.
ப்ரலம்பாஸுரனைக் கொன்றவன் பலராமனாயிருக்க, கண்ணன் கொன்றதாகக் கூறியது, அவர்களின் ஒற்றுமையை காட்ட என்கிறார்.
Leave a comment