வான் இளவரசு வைகுந்தக் குட்டன் வாசுதேவன் மதுரை மன்னன் நந்த * கோண் இளவரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழல் கொடு ஊதின போது * வான் இளம்படியர் வந்து வந்தீண்டி மனம் உருகி மலர்க் கண்கள் பனிப்ப, * தேனளவு செறி கூந்தல் அவிழச் சென்னி வேர்ப்பச் செவி சேர்த்து நின்றனரே.
பெரியாழ்வார் திருமொழி 3.6.3
பரமபதத்திற்கு யுவராஜனாய், அந்த திருநாட்டில் உள்ளவர்கள் எப்போதும் நோக்க ஆசைப்படும் சிறுபிள்ளையாய், வசுதேவர் திருமகனாய், வட மதுரைக்கு நிர்வாககனாய், நந்தகோபருக்கு பிள்ளையாய், இளவரசனாய், இடையர்களுக்கு பரிய வேண்டும்படியான பிள்ளையாய், பசு மேய்க்க பெற்ற கண்ணன், குழல் ஊதினபோது, தேவலோகத்தில் உள்ள அனுபவ யோக்யமான சரீரங்களை உடைய பெண்கள் (குழல் ஓசை தூண்ட) வந்து வந்து திரண்டு, மனம் நீர் பண்டம் போல உருகி, மலர் போன்ற கண்கள் ஆனந்ததாலே குளிர, தேனோடு கூடின செறிந்த கூந்தல் அவிழ்ந்து அலையவும், நெற்றியானது வேர்க்கவும் காதுகளை இந்த குழல் ஓசையை கேட்க நின்றார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
கண்ணனது குழலிசையைக் கேட்ட மேலுலகத்து மாதர்கள் தங்கள் இருப்பிடத்திலே இருக்காமல் கண்ணன் இருக்கும் இடத்தில் கூட்டம் கூட்டமாக ஓடி வந்து அந்த குழலோசையை நன்றாக கேட்ட பிறகு அவர்களது மனம் நீர் போல உருகியது. கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் துளிர்த்தன; கூந்தல் அவிழ்ந்தன; நெற்றி வேர்த்தது; இப்படிப்பட்ட விகாரங்களை அடைந்து கொண்டே அந்த இசையை கேட்டுக் கொண்டு மயங்கிக் கிடந்தனர்.
பரமபதத்தில் எம்பெருமான் நித்ய ஸூரிகளுக்கு தலைவராக இருந்தாலும், அவர்கள் பரிந்து நோக்கும் படி பருவத்தை எடுத்து, அவர்களின் கீழே தன்னை அமைத்துக் கொண்டு இருக்கும் தன்மையை வானிளவரசு என்கிறார். ‘மூதுவராம் விண்ணாட்டவர்‘ (திருவிருத்தம் 1.2) என்று நம்மாழ்வார் அருளியபடி (யாவர்க்கும் முற்பட்டவரான பரமபதத்து நித்யஸூரிகள் வணங்குந் தன்மையையுடைய திருவடியிணைகளில்) நித்யசூரிகளை முதன்மையாக்கி அவர்கள் கீழே தன்னை அமைத்துக் கொண்டு, அவர்கள் செய்யும் சேவைகளை (தொண்டுகள்) ஏற்றுக் கொள்வதை சொல்கிறார்.
“திருவனந்தாழ்வான் மடியிலும் ஸேநாபதியாழ்வான் பிரம்பின் கீழிலும் பெரிய திருவடி சிறகின் கீழிலுமும் ஆயிற்று இந்த தத்துவம் வளர்வது” என்பது பட்டர் அருளி செய்வது. அந்த ஸூரிகள் இவன் மேலுள்ள பரிவினால் இவனுக்கு மங்களாசாஸநம் பண்ணுவதை வைகுந்தக் குட்டன் என்கிறார். ஆயர்பாடியில் உள்ள பஞ்சலக்ஷம் குடிக்கும் அரசர் நந்தகோபர் ஆகையாலே இவனை நந்தர் கோன் இளவரசு என்கிறார்.
பரமபததிற்கு யுவராஜனாகவும், நித்யசூரிகளின் பரிவுக்கு காரணமாக இருக்கும் பருவத்தை உடையனவாகவும், வசுதேவனுக்கு மகனாகவும், வட மதுரைக்கு அரசனாகவும் நந்தகோபருக்கு இளவரசராகவும் உள்ள கண்ணன் குழல் ஊதியபோது, மேல் உலகத்தில் உள்ள பெண்கள் கூட்டம் கூட்டமாக பிருந்தாவனத்திற்கு வந்து, நெஞ்சு உருக கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக, தலை முடி அவிழ நெற்றியானது வேர்வை அடைய, செவி எம்பெருமானின் / கண்ணனின் குழல் ஓசையில் மகிழ்ந்து திகைத்து நின்றார்கள்.
Leave a comment