இடவணரை இடத் தோளொடு சாய்த்திரு கைகூடப் புருவம் நெரிந்தே, * குட வயிறு பட வாய் கடை கூடக் கோவிந்தன் குழல் கொடடூதின போது, * மட மயில்களோடு மான் பிணை போலே மங்கைமார்கள் மலர்க் கூந்தல் அவிழ, * உடை நெகிழ ஓர் கையால் துகில் பற்றி ஓல்கி ஓட அரிக் கண் ஓட நின்றனரே
பெரியாழ்வார் திருமொழி 3.6.2
பசு மேய்க்கும் கண்ணன், இடப்பக்கத்து மோவாய்க் கட்டையை இடது திருத்தோளுடன் சாய்த்து, இரண்டு திருக்கைகளையும் புல்லாங்குழலுடன் சேரவும் திருப்புருவங்கள் நெளித்தும் மேலே எழுந்தபடி இருக்கவும், திருவயிரானது குடம் போல தோற்றம் அளிக்கவும், திருப்பவளமானது இரண்டு பக்கமும் குவிந்து புல்லாங்குழல் துளைகள் அளவாகவும் கொண்டு அதனை ஊதின காலத்தில், மடப்பத்தை உடைய மயில்கள் போலவும், பெண் மான்கள் போலவும் இளைய பெண்கள் பூக்களால் அலங்கரிக்கப் பட்ட கூந்தல் நெகிழ்ந்து அலையவும், உடையானது நெகிழவும் அந்த உடையாய் பிடித்துக் கொண்டு வெடிக்கப்பட்டு ஒடுங்கி, சிவந்த மற்றும் கறுத்த வரிகள் ஓடின கண்களானவை அவன் பக்கம் ஓட, திகைத்து நின்றார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
பசுக்களை மேய்க்கும் போது அவை விலகாமைக்கும், மேய்ப்பதற்கும், அவை மீண்டு வருவதற்கும் ஏற்ற விதத்தில் குழல் ஊதும் வல்லமை பெற்றதால் கோவிந்தன் என்று இங்கே சொல்கிறார்.
இவ்வாறு கண்ணன் குழலூதுவதைக் கேட்ட இளம்பெண்கள் இருந்த இடத்தில் இருந்த போதும், உடல் விகாரமடைந்து தலை முடி அவிழவும், இடுப்பில் உடை நெகிழவும் இப்படியே நாம் புறப்படுவோம் என்று ஒருவிதமான வெட்கமும் இன்றி, நெகிழ்ந்த உடையை ஒரு கையாலும், அவிழ்ந்த முடியை ஒரு கையாலும் பற்றிக் கொண்டு மிகுந்த சிரமத்துடனே ஓடி வந்து கண்ணனைக் கண்டார்கள் என்கிறார்.
மட மயில், மான் பிணை என்று சொன்ன இரண்டும், பெண்கள் மற்றும் அவர்கள் கண்கள் ஓடிய இரண்டிற்கும் உபமானங்களாக சொல்லப்பட்டன.
Leave a comment