திவ்ய பிரபந்தம்

Home

3.6.1 நாவலம் பெரிய தீவினில்

‘நாம் பிறந்து வளர்க்கிற ஊரில், ஒரு பொருளை இன்னொரு தேவதைக்கு கொடுப்பதா’ என்று கண்ணன், இந்திரனுக்கு இடுகிற சோற்றை விலக்கி, மலைக்கு இடுவித்து, அதனை அடைய தான் அமுது செய்துவிடுவதால், இந்திரன் கோபம் கொண்டு மேகங்களை ஏவி பிருந்ததாவனத்தில் ஏழு நாட்கள் கல் மழை பொழிவித்தபோது, அதனை கோவர்தனகிரி என்ற கல் மலையை தாங்கி அங்குள்ள ஆயர்களையும், ஆநிரைகளையும் காத்த வரலாற்றினை சென்ற பதிகத்தில் அனுபவித்த ஆழ்வார் இந்த பதிகத்தில் கண்ணன் குழல் ஊதிய போது நடந்த அதிசயங்களை அனுபவித்து பாடுகிறார்.

கண்ணன் பிருந்தாவனத்தில் திருக்குழல் ஊதும் போது, அந்த குழல் ஓசையின் வழியே, இளைய கோபிகள் சிலர் தங்களுக்கு வைத்த காவல்களையும் மீறி, இவன் நின்ற இடத்துக்கு வந்து இவனை சூழ்ந்து கொண்டு இருந்ததையும், இன்னும் சிலர் அவசரம் அவசரமாக ஓடி வந்து, இவன் அருகில் வந்ததும், நாணம் வந்துவிடவே, உடல் நெகிழ்ந்து தங்களுடைய உடைகள் தளரவே, அவற்றை ஒரு கையினால் பிடித்து அவனை கண்ணால் நோக்கி அங்கேயே இருந்ததையும், இன்னும் சிலர் இந்த குழல் ஓசையை கேட்டு, நெஞ்சு உருகி, திரண்டு, கண்கள் பனித்து, இதையே கேட்டு கொண்டு நின்றபடியையும், மேனகை, திலோத்தமை என்ற மேல் உலக நடனமாடும் பெண்கள், இவனுடைய குழல் ஓசையை மெய்மறந்து ரசித்து, தங்களுடைய நடனங்களை மாற்றியபடியையும், தும்பரு நாரதர், கின்னர மிதுனங்கள் முதலானோர், வீணையை மறப்பார், கின்னரம் தொடார், என்றபடி இவனுடைய குழலோசையின் ரசத்தில் ஈடுபட்டு இருப்பதையும், வான வீதியில் உலாவுபவர்கள் இவனின் அமிர்தமயமான நாத வெள்ளமாகிற வலையில் அகப்பட்டு செய்வது அறியாமல் இருப்பதையும், தேவர்கள் தங்களுக்கு அளிக்கப்படும் கவிஸ் என்ற உணவுகளை மறந்து திருவாய்பாடிக்கு வந்து இவனின் இசையாகிற உணவை உண்டு அவனையே பின் தொடர்ந்ததையும், பற்பல பறவைகள் தங்கள் கூட்டை விட்டு வெளியே வந்து, இவனின் ஓசையில் அங்கேயே திரிந்ததையும், பசுதிரள்கள் கால்களை நன்றாக வைத்துக்கொண்டு செவிகளை திருப்பி, எம்பெருமானின் குழலோசையில் லயித்து நின்றதையும், மான்கள் மேய்வதையும் மறந்து அங்கேயே திரிந்ததையும், உயிரற்றவையும் (அசேதனங்கள்) உயிருள்ளவைகளை காட்டிலும் மிகவும் ஈடுபாடுடன் இருந்ததையும் தனிதனியே பேசி அவனுடைய திருகுழல் ஓசையை ஆழ்வார் அனுபவிக்கிறார்.

பெரியாழ்வார் திருமொழி 3.6.1

பெரியதாக ((பெருமைகளில் ஏற்றம் பெற்றது) இருந்துள்ள ஜம்பூத்வீபம் என்ற தீவின் நடுவில், வாழ்கின்ற ஒன்றிலும் குறைவில்லாதவர்களே(அவன் அவதரித்த தேசத்தில் பிறந்து, அவன் அவதார குண சேஷ்டிதங்களை அநுபவித்தவர்கள், மற்றும் அதற்கு ஈடான ஞான பிரேம குணங்களை உடையவர்கள்), இங்கு ஒரு ஆச்சரியத்தை கேளுங்கள்; சுத்தமான ஸ்ரீ பாஞ்சஜனயத்தை திருக்கையில் உடைய ஸ்ரீ மகாலக்ஷ்மியின் பதியே, (விரோதிகளை விலக்கி, அனுகூலர்களை காப்பாற்றக் கூடிய குணம் சொல்லப்பட்டது) போக்கியமான திருப்பவளத்தில் வைத்து ஊதுகின்ற குழல் வழியே வருகின்ற இசையின் மார்க்கமாக இடையருடைய சிறு பெண்கள் இளமையான தங்கள் கொங்கைகள் நாங்கள் முன்னே போகிறோம் என்று மகிழ்ச்சி அடைந்தன என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

ஜம்பூத்வீபம் என்ற தீவின் நடுவில் மேரு என்னும் பொன் மலை உள்ளது; அவற்றின் நடுவே நாவல் மரம் உள்ளது. இந்த தீவின் சிறப்பு, இங்கே பல நல்ல கர்மாக்களை செய்வதற்கு அனுகூலமாக உள்ளது. ஆகவே இப்படி தீவினில், பல தவங்களைச் செய்துதான் மனித பிறவி எடுக்கவேண்டும், அப்படி இத்தீவில் பிறந்த பெண்காள்! உங்களைப் போல் பல பெண்கள் திருவாய்ப்பாடியில் பிறந்து பகவத் விஷயத்தில் அனுபவித்ததை பார்த்து “நாவலம் பெரிய தீவினில் வாழும் நங்கைமீர்கள்!”” என அழைக்கிறார்.

தூய வாயில் என்றது, தன்னுடைய யுக்தி விசேஷங்களால் அனுகூலர்களை வாழ்விக்க வல்ல தூய்மை என்கிறார்.

திருவாய்பாடி, ‘கிருஷ்ணன் கிடாய், பெண்கள் கிடாய்’ என்று இருப்பதால் இளம் பெண்களின் உறவு முறைக்காரர்கள் ‘பெண் கொடுப்பது , பெண் எடுப்பது’ என்று பலவாறு பேசிக்கொண்டு இருந்தாலும், அவற்றை எல்லாம் ஒதுக்கி, கண்ணன் புல்லாங்குழலை வாயில் வைத்து ஊதும் இசையானது, அந்த பெண்களின் செவிகளில் புகுந்து இங்கே வாருங்கள் என்பதைப் போல ஒலிக்கும் குழல் ஓசை என்கிறார்.

இளங் கொங்கை குதுகலிப்ப என்பதால், குழல் ஓசையைக் கேட்ட, இடைப்பெண்களின் கொங்கைகள் தாங்கள் முன்னே செல்கிறோம் என்று சொன்னது மட்டும் இல்லாமல், அவற்றை சுமந்து இருக்கும் உடலையும் இந்திரியங்களையும், முக்கியமாக மனதையும் கட்டுக்குலைத்து விட்டன என்கிறார். அதனால், தங்களுக்குக் காவலாக வீட்டில் காவல் என்று இருக்கின்றவர்களை அலட்சியம் செய்து விட்டுக் கண்ணன் குழல் ஊதுகிற இடம் சென்று புகுந்து ஒரு கயிற்றிலே அடர்த்தியாக பூக்களை ஒழுங்கு படத் தொடுத்ததைப் போல வரிசையாக நின்று கண்ணன் முகத்தைக் கண்டவாறே, வெட்கப்பட்டு, அவன் முகத்தை நேரடியாக பார்க்காமல், தலைகவிழ்ந்து நின்றனர் என்கிறார்.

Leave a comment