வன் பேய் முலை உண்டதோர் வாய் உடையன் வன்தூண் என நின்றது ஓர் வன் பரத்தை * தன் பேரிட்டுக்கொண்டு தரணி தன்னில் தாமோதரன் தாங்கு தட வரைதான் * முன்பே வழிகாட்ட முசுக் கணங்கள் முதுகில் பெய்து தம் முடைக் குட்டன்களை * கொம்பேற்றி இருந்து குதி பயிற்றும் கோவர்த்தனமென்னும் கொற்றக் குடையே. 3.5.9
பெரியாழ்வார் திருமொழி 3.5.9
கொடிய வலியவளான பூதனையின் (விஷம் தடவின) முலையை உண்ட வாயை கொண்டவனாய், வலிய பாரத்தைத் (தாங்கிக் கொண்டு) நின்றதொரு வலிய தூணைப் போல் ‘கோவர்ந்தன் ‘ என்ற தன் பெயரை அந்த மலைக்கு இட்டு, இந்த நிலத்திலே ஆய்ச்சி ஒருத்தி கட்டவும் அடிக்கவும் படி பவ்யனாய் இருந்தவன், (பேய் தாயை முடித்து ஆய் தாய்க்கு பவ்யமாய் இருந்தவன்), தாங்கி கொண்டு நின்ற மலையாவது, (ஒரு வகைப்பட்ட) குரங்குகளின் கூட்டம் ஏற்கனவே ஒரு கிளையில் இருந்து மற்றொரு கிளையில் பாயும் வழி காட்டுவதற்காக தம்தம் குட்டிகளை முதுகிலே கட்டிக் கொண்டு கொம்பிலே ஏற்றி வைத்து ஒரு கொம்பில் இருந்து இன்னொரு கொம்பிற்கு தாவும் படி பழக்கும் மலை கோவர்தனம் என்ற வெற்றிக் குடையே என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
கண்ணன், குன்றத்தை ஏந்தும் இந்த அற்புத செய்கையைப் பிரமன் இந்திரன் முதலிய தேவர்களுக்கு காட்டாது, தன்னுடைய பரம கிருபையினால் மனிதர்க்குக் காட்டி அருளியதை, தரணி தன்னில் என்று ஆழ்வார் கூறுகிறார்.
Leave a comment