படங்கள் பலவும் உடைப் பாம்பரையன் படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன் போல், * தடங்கை விரல் ஐந்தும் மலர வைத்துத் தாமோதரன் தாங்கு தட வரை தான், * அடங்கச் சென்று இலங்கையை ஈடழித்த அனுமன் புகழ் பாடித் தம் குட்டன்களை, * குடங்கைக் கொண்டு மந்திகள் கண் வளர்த்தும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.
பெரியாழ்வார் திருமொழி 3.5.7
பல படங்களையுடைய சர்ப்ப ராஜனான ஆதிசேஷன், தங்கள் பரந்த பூமியை தன்னுடைய தலையினால் தாங்கிக் கொண்டிருப்பது போல தாமோதரனான கண்ணன், (ஒரு அபலைக்கு கட்டவும் அடிக்கவும் படி நடந்து கொண்டு, அவள் கட்டின காட்டினை அவிழ்க்க சக்தி இல்லாதவனாய்), பெரிய திருக்கரத்திலுள்ள ஐந்து விரல்களாலும் விரித்து தாங்கிக்கொண்டு இருக்கின்ற மலை, ஆகாய வழியில் சென்று லங்கையை முழுவதும் கட்டழித்த ஹனுமானுடைய புகழை பெற்ற பெண் குரங்குகள் பாடிக்கொண்டு, தங்களுடைய குட்டிகளை தங்கள் உள்ளங்கைகளில் ஏந்திக் கொண்டு, சீராட்டி உறங்கச் செய்த மலை கோவர்தனம் என்ற வெற்றிக் குடையே என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
இங்கு ‘தான்’ என்று சொன்னது பெரிய மலையாகிய கோவர்தனம் அதில் உள்ள பஞ்சலக்ஷம் கூடி ஆயர்கள், மிருகங்கள், மரங்கள், அங்குள்ள மற்றைய மக்கள் எல்லோரையும் ஒரு சேர ‘தான்’ என்று நினைப்பதை சொல்கிறது.
Leave a comment