செப்பாடுடைய திருமாலவன் தன் செந்தாமரைக் கை விரல் ஐந்தினையும் * கப்பாக மடுத்து மணி நெடுந்தோள் காம்பாகக் கொடுத்துக் கவித்த மலை * எப்பாடும் பரந்திழி தெள்ளருவி இலங்கு மணிமுத்து வடம் பிறழ, * குப்பாய மென நின்று காட்சி தரும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.
பெரியாழ்வார் திருமொழி 3.5.6
ஆர்ஜவ குணத்தை உடைய கண்ணன், பிராட்டிக்கு பதியாய், தன்னுடைய செந்தாமரைப் பூ போன்ற திருக்கையில் உள்ள ஐந்து விரல்களையும் மலையாகிற குடைக்குக் கீழ் காப்பாகக் கொண்டு செறித்து நீலமணி போன்ற நிறத்தை உடைய, நெடியதாய் உள்ள திருத்தோளை அந்த குடைக்கு காம்பாகக் கொடுத்து தலைகீழாகக் கவித்த மலையாவது எல்லாப் பக்கங்களிலும் பரவி தங்குகிற அருவிகள் விளங்கி அழகிய முத்து வடம் போல் தனித்தனியே பிரகாசிக்க அது அவனுக்கோர் முத்துச் சட்டை என்று தோன்றும் படியாக நின்று காட்சி கொடுக்கிற கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையாம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
ஆர்ஜவ குணம் என்பது, ‘சிதகுரைத்தாலும் நன்று செய்தார் என்பது ஆகும். (தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாளாகிலும் சித குரைக்கு மேல், என்னடியார் அதுசெய்யார், செய்தாரேல் நன்று செய்தாரென்பர் போலும், பெரியாழ்வார் திருமொழி 4.9.2).
செவ்வை குணம் என்பது, இந்திரனுக்கு கொடுக்க வேண்டிய சோற்றைத் தான் அமுது செய்து, அதனால் மழை பெய்ய வைத்து, அதனால் துன்பமுற்ற மக்களை ஈரமற்ற நெஞ்சத்துடன் இல்லாமல், தானே முன்னே இருந்து, எந்த மலை ரக்ஷகம் என்று சொன்னாரோ அதே மலையை எடுத்துக் காப்பாற்றியது. இந்த குணம் பிராட்டியோடே சேர்த்தியால் வந்தது என்பர், அதனால், ஆழ்வார் திருமால் என்றார்.
‘ சுனை வாய்நிறை நீர்பிளிறிச் சொரிய, இன ஆநிரை பாடி அங்கே ஓடுங் க, அப்பன் தீ மழை காத்துக் குன்றம் எடுத்தானே‘ (திருவாய்மொழி 7.4.10) என்றபடி, அவனை சூழ்ந்து எல்லா பக்கங்களில் இருந்தும் இடை விடாமல் தங்குகிற தெளிந்த சுனை நீர் அருவிகள் ஆனவை அழகிய முத்து வடம் போல தனிதனியே பிரகாசித்து காட்சி கொடுத்தன என்கிறார்.
Leave a comment