அரவில் பள்ளி கொண்டு அரவம் துரந்திட்டு அரவப் பகையூர்தி அவனுடைய * குரவில் கொடி முல்லைகள் நின்றுறங்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடை மேல் * திருவிற் பொலி மா மறை வாணர் புத்தூர்த் திகழ் பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும் * பரவு மன நன்கு உடைப் பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே.
பெரியாழ்வார் திருமொழி 3.5.11
திருவனந்தாழ்வான் மேலே (ஷீராப்தியில்) பள்ளி கொண்டு (அதனை விட்டு, ஆய்பாடியில் வந்து திருஅவதாரம் செய்து) காளிய நாகத்தை ஒட்டி விட்டு, சர்ப்ப வகைகளுக்கெல்லாம் பகைவனான பெரிய திருவடியை (கருடாழ்வான்) வாகனமாக உடையவனுடைய குரவ மரத்தில் கொடியாய் படர்ந்து கிடக்கிற முல்லைகள் ஆனவை நிலைபெற்று உறங்கும்படி இருக்கும் கோவர்த்தனம் என்ற திருநாமத்தை உடைய, மழை தடுத்து வெற்றியை உடைய குடையான மலையின் விஷயத்தைப் பற்றி வைஷ்ணவ ஸ்ரீயினால் விளங்குகின்ற வேதத்திற்கு வியாசபாதம் செலுத்த வல்லவர்கள் வசிக்கின்ற ஸ்ரீவில்லிபுத்தூரில் விளங்கும் பெரியாழ்வார் அருளிச் செய்த சொல் மாலையான இந்த பத்துப் பாசுரங்களையும் பரவும் படியான மனதினை உடைய பக்திமான்கள் எல்லாவற்றிக்கும் மேலான ஸ்ரீ வைகுந்தத்தை அணுக பெறுவார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
இந்த திருமொழி / பதிகம் கற்றவர்க்கு பலன் சொல்லி முடிக்கிறார். ஆதிசேஷன் மேல் பள்ளிகொண்டு, காளியன் என்ற பாம்பை துரத்தி விட்டு, பாம்பின் பகைவனான கருடனின் மேல் அமர்ந்து செல்லும் பரமாத்மா இந்த கண்ணன் என்று மொழிகிறார். ஸ்ரீ வைஷ்ணவர்கள் நிறைந்து விளங்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் வேதங்களை நன்கு அறிந்த பெரியாழ்வார் சொன்ன இந்த பத்து பாடல்களை விருப்பத்துடனும், பரவசமாய் பேசும் நல்ல மனதை உடைய பக்திமான்கள், தங்களுடைய ஞான, பிரேம குணமான பகவத் அனுபவ கைங்கர்யங்களில் ஆழ்ந்து, அடியார்கள் கூட்டங்களுடன் சேர்ந்து இருக்கும்படியான சர்வ உத்தமமான ஸ்ரீவைகுந்ததை அடையப் பெறுவர் என்று முடிக்கிறார்.
Leave a comment