கொடியேறு செந்தாமரைக்கை விரல்கள் கோலமும் அழிந்தில வாடிற்று * வடிவு ஏறு திருவுகிர் நொந்துமில மணிவண்ணன் மலையும் ஓர் சம்பிரதம் * முடி எறிய மா முகிற் பல் கணங்கள் முன்னெற்றி நரைத்தன போ * குடியேறி இருந்து மழை பொழியும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.
பெரியாழ்வார் திருமொழி 3.5.10
(ஐஸ்வர்ய சின்னங்களாகிய) கொடியை ரேகை ரூபமாக தரித்துக்கொண்டு, (நிறத்தாலும், செவ்வியாலும், மென்மையாலும்) செந்தாமரைப் பூவினைப் போல் உள்ள திருக்கரங்களும், திருவிரல்களும், (ஏழு நாட்கள் ஒருமுகமாக மலையைச் சுமந்து கொண்டு நின்ற போதும்), இயற்கையான அழகும் அழிந்துவிட வில்லை. வாட்டத்தையும் அடைய வில்லை; அழகு மிகுந்து இருக்கும் திரு நகங்களானவை நொந்து போகவும் இல்லை; நீல ரத்ன வர்ணம் உள்ள கண்ணன் எடுத்த கோவர்த்தன மலையும், (அதனை எடுத்து இவன் கொண்டு நின்ற நிலையும்), ஒரு கண் கட்டு வித்தையாய் இருந்தது. (அந்த மலை எது என்று) மலையின் சிகரத்தில் ஏறின பெரிய மேகக் கூட்டங்கள் தங்கள் நெற்றியின் முன் பாகமானது நரைத்ததாற் போல எல்லா இடங்களில் குடியேறி இருந்து மழை பொழிய நின்ற கோவர்த்தனம் என்ற கொற்றக் குடையே என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
அழகிய செந்தாமரை போன்ற திருக்கரங்களையும் திரு விரல்களையும் கொண்ட கண்ணன் ஏழு நாட்கள் இந்த குன்றினை ஏந்திய போதும், அழகு சிறிதும் குறையாமல், கொஞ்சமும் வாட்டமும் முடியாமல், திருநகங்களும் சிறிதும் நோவு எடுக்காமல், சிறிதும் மாற்றம் இல்லாமல் இருந்த நீலமணி போன்ற நிற கண்ணன், எடுத்த மலையும் அவன் நின்ற நிலையும் ஒரு மாயா ஜால வித்தையை போல் உள்ளது. அந்த மலை, முகட்டில் சேர்ந்த பல மேகங்கள் மழையை பெய்வித்து செழிப்பாக செய்ததனால் அந்த மலையின் முன்புறம் நரைத்திருந்ததைப் போல் உள்ள கோவர்தனம் என்ற குடையே என்கிறார். இப்படி மழை பெய்து எங்கும் ஜலம் நிறைந்த காலத்திலும் மழை பொழியாமல் வெளுத்து இருந்த காலத்திலும் இருக்கும்படி வசிக்க தகுந்த தேசம் ஆனதால், இப்படி மழை பெய்வது இந்திர ஜாலம் அன்று என்றும், பரமார்த்தம் (எம்பெருமானின் கருணை) என்றுm உரையாசிரியர் கூறுகிறார்.
Leave a comment