வானத்தில் உள்ளீர் வலியீர் உள்ளீரேல் அறையோ வந்து வாங்கும் என்பவன் போல் * ஏனத் துருவாகிய ஈசன் எந்தை இடவன் எழ வாங்கி எடுத்த மலை * கானக் களியானை தன் கொம்பிழந்து கதுவாய் மதம் சோரத் தன் கை யெடுத்து * கூனல் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.
பெரியாழ்வார் திருமொழி 3.5.5
மேல் உலகங்களில் வசிப்பவர்களே, வல்லமை உள்ளவர்களாய் இருந்தீர்களாகில், வெற்றி சம்பந்தமான முழக்கம் இட்டு, இந்த இடம் வந்து, இந்த மலையை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்பவன் போல, (நீருக்கும் சேற்றுக்கும் கலங்காத) வராஹ வேஷம் கொண்டு, பூமியை (ஊன்றி இடந்து ஏயற்றில் கொண்ட – திருவாய் மொழி, 7.4.3) அண்ட பித்தியில் இருந்து விடுவித்தவனாய், எனக்கு ஸ்வாமியாய் உள்ளவன், மண்கட்டி போல், வேர் பற்றுரோடு கிளரும் படி வாங்கி எடுத்துக் கொண்டு நின்ற மலையாவது, காட்டிலே செருக்குடன் திரிகின்ற யானையானது, தன் தந்தத்தை, (வருடத்தில் குத்துண்டு முறிவதால்) இழந்து, கொம்பு முறிந்து புண்பட்ட வாயில் மத நீரானது ஒழுக தன் துதிக்கையை எடுத்து வளைந்து இருந்த மூன்றாம் பிறை சந்திரனை, விரும்பி மேலே பார்த்துகொண்டு நின்று இருக்கும் போல் உள்ள கோவர்தனம் எண்ணும் கொற்றக் குடையாம்.
வராஹரூபம் கொண்டருளின ஸ்வாமியாயும் எனக்குத் தந்தையாயுமுள்ள கண்ணன், “மேலுலகத்திலிருப்பவர்களே! நீங்கள், என்னோடு சமமாக வல்லமை உள்ளவர்களாய் இருப்பீர்களாகில் இங்கே வந்து, இந்த மலையை தாங்கிக்கொண்டு நில்லுங்கள்” என்று சொல்கிறவன் போல், மலையை, ஒரு மண்கட்டி போல் எடுத்து நிற்கின்றார். காட்டில் செருக்குடன் திரிகின்ற யானையானது, ஓரிடத்தில் குத்துண்டு முறிந்த தன் தந்தத்தை இழந்ததனால் அக்கொம்பு முறிந்து புண்பட்ட வாயிலே மதநீரானது ஒழுக தனது துதிக்கையை உயரத்தூக்கி, வானில் தோன்றும் பிறையை தான் இழந்த கொம்பாக நினைத்து பிடிக்க விரும்பி மேல்நோக்கி பார்த்து கொண்டு இருக்கும் மலையே, கோவர்தனம் என்ற குடையே என்கிறார்.
கண்ணன், விடாது, வருந்தாது , தூக்கிக்கொண்டு இருக்கும் ஆற்றலை இங்கே ஆழ்வார் சொல்கிறார். மேலுலகத்தில் உள்ளவர்களிடம் உண்மையிலேயே வலிமை உள்ளவர்கள் இருப்பீர்கள் ஆனால், இந்த மலையை சிறிது நேரம் தூக்குங்கள் என்று கூப்பிடுகிறார். பாதாள உலகம் சென்று பூமாதேவியை விடுவித்து திருஎயிற்றிலே தாங்கி நின்ற எம்பெருமானுக்கு இந்த மலையை தூக்குவது ஒரு அரிதான காரியமா என்று ஆழ்வார் கேட்கிறார்.
Leave a comment