திவ்ய பிரபந்தம்

Home

3.5.1 அட்டுக் குவி சோற்று

தான் விரும்பி கன்றுகளையும் பசுக்களையும் மேய்த்து, கோவர்த்தனகிரி மலையை எளிதாக தூக்கி, அதனால் தன்னுடைய அடியவர்களை காப்பாற்றியும் எதிரிகளை வீழ்த்தியும், அந்த மலையை ஏழு நாட்கள் தூக்கி நின்ற அழகையும், அதனால் அவனுடைய திருக்கரங்கள் நோகாததையும் பாடி, ஆழ்வார், இந்த பதிகத்தில் இப்படிபட்ட எம்பெருமானுடைய கல்யாண திருக் குணமாக அடியவர்களை ஆபத்தில் இருந்து அது வருவதற்கு முன்பே காப்பாற்றும் ஆபத்சகத்வத்தை இந்த பதிகத்தில் ஆழ்வார் அனுபவித்து பாடுகிறார்.

பெரியாழ்வார் திருமொழி 3.5.1

சமைத்து குவிக்கப்பட்ட சோறாகிற மலையையும், தயிர் ஓடையையும், நெய் சேறினையும், ஆகிய இவற்றை எல்லாம் சடக் என்று அமுது செய்து பகையை உண்டாக்கினவனாய் அலைகள் உள்ள கருங்கடல் போன்ற திரு நிறத்தை உடையவனாய், தாங்கிய மலையாவது வட்டமாய், பெருத்து கண்களை உடைய தாயின் வசத்தில் மரியாதையுடன் இருக்கும் மான் கன்றினை வலையில் பிடித்துக்கொண்டு குற பெண்கள் பஞ்சு சுருளின் தலையினால் பால் உண்ணக் கொடுத்து வளர்க்கும், பசுக்கள் அதிகமாகிக்கொண்டு போவதால் கோவர்தனம் என்று பெயர் பெற்ற, அந்த மழையை வென்ற வெற்றியை பெற்ற, ஒருவர் மேல் ஒரு துளி விழாதபடி கவிழ்ந்து நிற்பதால், குடை என்று பெயர் பெற்ற மலை ஆகியது என்பது இதன் பொழிப்புரை.

வருடம் தோறும் கோப ஜனங்கள் இந்திரனை ஆராதித்து, அதனால் அவன் பிரீத்தி அடைந்து அங்கே மழை பெய்ய செய்விப்பதும் அதனால் அங்கு பசுக்களுக்கு புல்லும் தண்ணீரும் உண்டாக, அதனால் பாலும் நெய்யும் மிகுந்து விளங்குகிறது. ‘எழில் விழவில் பழ நடைசெய், மந்திர விதியில் பூசனை’ (பெரிய திருமொழி, 2.3.4) என்று இதனை ஒரு பழையதாக நடந்து வரும் ஒரு அனுஷ்டானம் என்று சொல்கிறார்.

அதற்காக ஆயர்பாடியில் ஒவ்வொரு வீட்டிலும் வரி விதித்து சமைத்து, வண்டி வண்டியாக வந்து திரண்டு, பெரும் திருப்பாவாடைப் போல், பர்வதம் அல்லது மலை போல் கிடந்த சோற்றின் மிகுதியைக் கொண்டு, ‘சோற்றுப் பருப்பதம்’ எனப்பட்டது.  மலையில் ஓடைகளும் சேறுகளும் இருக்கும் ஆதலால், இங்கு தயிர்த்திரளை ஓடையாகவும் நெய்ப் பெருக்கைச் சேறாகவும் உதாரணமாக கூறுகிறார். சோற்றுத் திரளில் தொட்டியாகக் கட்டி அதில் தயிரையும் நெய்யையும் நிறைத்ததை கூறுகிறார்.

‘நெடு நாளாக இந்திரனுக்குச் செய்து வந்த இந்த பூஜையை நீ உனக்காக ஆக்கிக் கொள்ள விட மாட்டோம்’ என்று சில இடையர் மறுப்பர்களோ என்று சந்தேகித்து ‘பொட்டத்துற்றினான் ‘, அதாவது விரைவாக ஒரே கவளமாக விழுங்கினான்; ஓர் இமைப்பொழுது அளவில் அவற்றை எல்லாம் அமுது செய்திட்டான்.  இவன் இவ்வாறு செய்யவே, பூஜையை இழந்த இந்திரன் பசிக் கோபத்தினால் மேகங்களை ஏவி விடாமழை பெய்வித்ததனால் மழையாகிற பகைக்குக் கண்ணன் காரணம் ஆனதை ‘மாரிப்பகை புணர்த்த’ என்கிறார்.

அலையெறிகிற பெரிய கடலினது நிறம் போன்றவனான கண்ணன் தனது திருக்கைவிரலால் தூக்கின மலையே கோவர்தனத்தில் வெற்றியை உடைய குடை ஆகும்.

குறப்பெண்கள் அழகிய மான்களை வளர்க்க விரும்பி அவற்றை வலை வைத்துப் பிடித்துத் தங்கள் காலில் அவற்றை இருத்திப் பஞ்சு சுருள்களின் நுனியால் அவற்றுக்குப் பாலூட்டி வளர்க்கப் பெற்ற மலை என்கிறார். அந்த மான்கள் அந்த பஞ்சுச் சுருளின் நுனியைத் தன் தாய் முலையாகப் பாவித்து உறிஞ்சும் என்கிறார்.

தாம் படிக்கும் காலத்தில் விசாலமான ஞானத்தையும், அதனை உபதேசித்து அருளின ஆசிரியர்கள் பக்கம் சிரத்தையும், சக்தியும் இல்லாத ஒருவனை ஆசாரியன் “வாசுதேவன் வலையுளே”  என்றபடி எம்பெருமானாகிற வலையில் அகப்படுத்தி, அவனுக்கு எல்லா வேத சாஸ்திரங்களையும் பாலோடு அமுதம் என்று சொல்லப் படுகின்ற திருவாய்மொழியை உரைத்து வளர்க்கும் தன்மையை இந்த பாடலின் உள்ளர்த்தமாக உரையாசிரியர், ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரையில் சொல்கிறார். இப்படிப்பட்ட பெரிய மனிதர்கள் உறையும் இடம் இந்த மலை என்று இந்த மலையின் சிறப்பை கூறிகிறார்.

Leave a comment