வலங்காதின் மேல் தோன்றிப் பூவணிந்து மல்லிகை வனமாலை மெளவல் மாலை, * சிலிங்காரத்தால் குழல் தாழ விட்டுத் தீங்குழல் வாய் மடுத்து ஊதி * அலங்காரத்தால் வரும் ஆயப் பிள்ளை அழகு கண்டு என் மகள் ஆசைப் பட்டு, * விலங்கி நில்லாது எதிர் நின்று கண்டீர் வெள்வளை கழன்று மெய்ம் மெலிகின்றதே.
வலக் காதில் செங்காந்தள் பூவை சாத்திக் கொண்டும், அழகிய மல்லிகைப்பூ மாலையையும், காட்டு மல்லிகை மாலையையும் சாத்திக் கொண்டும், சிருங்காரத்தோடு திருக் குழல் கற்றையை திரு முதுகில் தாழவிட்டும், யாவர்க்கும் இனிமையைத் தரும் வேய்ங் குழலை திருபவளத்தில் வைத்து பலகாலும் ஊதிக் கொண்டும் இப்படிப்பட்ட வேஷத்தோடு வரும், இடைபிள்ளையின் அழகைக் கண்டு என் பெண் ஆசைப்பட்டு (இது கண்டவர்களை வருத்தும் என்று கண்ணை மாற வைத்து), வழி விலக்கி நில்லாமல், அவனுக்கு எதிரே நின்றதை கண்டீர் ; சங்கு வளைகளும் (கையில் தங்காமல்) கழன்று சரீரமும் மெலிந்து நின்றாள் என்று விசாரிக்க வந்தவர்களிடம் தாய் சொல்வது என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
கண்ணன் பசுக்களை மேய்த்து விட்டுப் பலவகை அலங்காரங்களோடு திரும்பி வரும் போது என் பெண் அவனுடைய தேர்ந்த அழகைப் பார்த்து ஆசை கொண்டு ‘இது கண்டவர்களை வருத்தும்’ என்று கண்ணை மாற வைத்து விலக வேண்டியதாக இருக்க, அப்படி செய்யாமல் அவன் அழகைப் பார்த்துக்கொண்டு எதிரே நின்றதனால் வளை கழல உடம்பு மெலியப் பெற்றாள் என்று தன் பெண்ணின் தன்மையை வினவ வந்தவர்களுக்கு சொல்லி தாய் வருந்துகின்றாள்.
இடது காதிற்கு ஒன்றும் சாத்திக் கொண்டதாகச் சொல்லாததால் ஒரு காதுக்குச் சாத்திக் கொள்ளும் வழக்கம் இருந்தது தெரிகிறது. ஒரு காதுக்குச் சாத்தின அளவிலே, மல்லிகை மௌவல் மாலைகளைக் கொண்டு மற்றொரு காதிற்கு பூவைச் சாத்திக் கொள்ள மறந்தான் என்றும் சொல்லலாம். உடம்பு மெலிந்ததை முன்னே சொல்லாமல் வளை கழன்றதை முன்னே சொன்னதற்குக் காரணம், வளை கழன்ற பின்பே இவள் உடம்பு மெலிந்ததைத் தான் அறிந்தாள் என்று கொள்ளலாம்.
இன்னாருக்கு என்று சொல்லாததால், கண்ணனின் குழல் ஓசை எல்லோருக்கும் இனிமையாக இருக்கும் என்பது விளங்கும். பேதுறுமுகம் செய்து நொந்து நொந்து (திருவாய்மொழி 9.9.9) என்பது போல முதலில் தன்னை வருந்தி (இவனுடைய குழல் ஓசையினால் இவனிடத்தில் ஈடுபட்ட கோபிகள் வருந்துவார்களே என்று இவன் வருந்தி), பிறகு அவர்களை வருத்துகிறான். ‘தும்புரு வோடு நாரதனும் தம்தம் வீணை மறந்து‘ (பெரியாழ்வார் திருமொழி 3,6.5) என்றும், ‘கோவலர் சிறுமியர் .. வந்து கவிழ்ந்து நின்றனரே‘ (பெரியாழ்வார் திருமொழி, 3.6.1) என்றும், பறவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்ப (பெரியாழ்வார் திருமொழி 3.6.8) என்றும் ‘மரங்கள் நின்று மது தாரைகள் பாயும்‘ பெரியாழ்வார் திருமொழி 3.6.10) என்றும் தேவ, மனுஷ்ய, தாவர, மிருக என்று எல்லாவற்றையும் ஒருங்க வருத்துகை சொல்லப் பட்டது.
கண்டவர்கள் கண்ணையும் மனதையும் தன் வசம் ஆக்கி கொள்ளும் அழகைக் கண்டு என் பெண் பிள்ளை ஆசை பட்டு என்பதை, அழகு கண்டு என் மகள் ஆசைப் பட்டு என்றதால் சொல்லப்பட்டது.
Leave a comment