சிந்துரப் பொடிக் கொண்டு சென்னி சிப்பித் திரு நாமம் இட்டு அங்கோர் இலையந் தன்னால், * அந்தரமின்றித் தன் நெறி பங்கியை அழகிய நேத்திரத்தால் அணிந்து, * இந்திரன் போல் வரும் ஆயப் பிள்ளை எதிர் நின்று அங்கு இனம் வளை இழவேலென்ன, * சந்தியில் நின்று கண்டீர் நங்கை தன் துகிலொடு சரி வளை கழல்கின்றதே.
பெரியாழ்வார் திருமொழி 3.4.8
திருமுடியில் சிந்தூர சூரணத்தைக் கொண்டு சாத்தியும், திரு நெற்றியில் ஒரு இலையாலே திருநாமம் சாத்தியும் தன்னுடைய நெறித்து நின்றுள்ள திருகுழலை அழகிய பீலிக்கண்களால் அலங்கரித்துக்கொண்டும் தேவேந்தரனைப் போல வருகிற இடைபிள்ளைக்கு எதிரான அந்த இடத்தில், நின்று கொண்டு இருந்து திரளான வளைகளை இழக்காதே என்று என் பெண்ணை குறித்து நான் சொல்லியபோதும், அவன் வருகிற வழியான சந்தியிலே நின்று, நாணம், அச்சம், மடம் முதலியவற்றால் சிறிதும் குறைவில்லாதவளான இவள் துகில் மற்றும் சரி என்னும் வளை எல்லாம் கழல்கின்றது என்று ஒருத்தியின் தாய் தன் தோழியிடம் சொல்லி தளர்க்கிறாள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
“இலயந்தன்னால் வரும் ஆயப் பிள்ளை” என சேர்த்து, ‘கூத்தாடிக் கொண்டு வருகின்ற’ என்ற பொருளில் வரும்.
நேரியதாய் நீண்டு ஒட்டின இடத்திலே பற்றும்படி இளையதாய் நிறத்தில் இருப்பது ஓரு இலையைத் திருநெற்றியிலே திருநாமமாக இட்டு கொண்டார் என்கிறார். “சிந்தூரப்பொடிக்கொண்டு” என்பதை ஆறாம் பாட்டில் சிந்தூரப்பொடியைத் திருநெற்றியில் திலகமாக இட்டு கொண்டதை சொன்ன ஆழ்வார் இந்த பாட்டில் அதனைத் திருக்குழல் மேல் அலங்காரமாகத் தூவிகொண்டார் என்கிறார்.
தேவர்கள் எல்லாம் சேவிக்க, அவர்களின் நிர்வாககரான இந்திரன் அவர்களுக்கு நடுவே தன் வைபவம் எல்லாம் தோன்ற வருவதைப் போல், தன்னோராயிரம் பிள்ளைகளான தோழர்கள் சேவிக்க, தன்னுடைய செருக்கும் பெருமையும் தோன்றும்படி வருகிறான் என்று சொல்கிறார். நித்ய சூரிகள் சேவிக்க, அவர்கள் நடுவே சர்வேஸ்வரன் வருவதை போல் என்றும் சொல்லலாம்.
கோல் வளை, கழல் வளை, வரி வளை என்பது போல சரிவளை என்பது ஒரு வகை வளையல்.
‘கண்ணன் வரும் வழியில் எதிர் நோக்கி நின்று, தம் நினைவுகளின் படி அவனோடு சேர்ந்து இருக்க முடியாமல் உடனே உடல் இளைத்து வளை கழன்று விழுந்தவர்கள் பலர் உண்டு. அவர்களைப் போல் நீயும் வளைகளை இழக்காதே என்று தன் மகளை பார்த்து தாய் சொல்லியும் அவள் அந்த பேச்சை கேட்காமல், அவன் வரும் வழியில் நின்று துகிலையும் வளையையும் இழந்து தவிக்கின்றாள் என்று ஒருத்தியின் தாய் இரங்குகின்றாள்.
கழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே (நாச்சியார் திருமொழி, 11.2) என்பது போல், சரிவளை என்பது பெயரில் மட்டும் இல்லாமல், கையில் தாங்காமல், சரிந்து போகும் வளை என்று ஆக்கினார் என்கிறார்.
Leave a comment