சாலப் பல் நிரைப் பின்னே தழைக்காவின் கீழ் தன் திருமேனி நின்று ஓளி திகழ, * நீல நல் நறுங் குஞ்சி நேத்திரத்தால் அணிந்து பல் ஆயர் குழாம் நடுவே, * கோலச் செந்தாமரைக் கண் மிளிரக் குழலூதி இசை பாடிக் குனித்து ஆயரோடு, * ஆலித்து வருகின்ற ஆயப் பிள்ளை அழகு கண்டு என் மகள் அயர்க்கின்றதே.
பெரியாழ்வார் திருமொழி 3.4.7
பற்பல பசுத்திரள்களின் பின்னே பீலிக்ககுடையாகிற சோலையின் கீழ் தன்னுடைய திருமேனியானது நின்று ஒளி விளங்க நீல நிறத்தை உடைய சுருட்சியாலும், நீட்சியாலும் உண்டான நன்மையை உடைய பரிமளம் கமழ்கின்ற திருகுழல் கற்றையை பீலிக்கண்களால் அலங்கரித்து பல இடையர்களின் கூட்டத்தின் நடுவே அழகியதாய் சிவந்து இருந்துள்ள தாமரை போல் இருக்கிற திருக்கண்களானவை மிளிர வேய்ங்குழலை ஊதிக் கொண்டு அதற்கு உரிய இசைகளை பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் இடைப்பிள்ளைகளோடு மகிழ்ந்து வருகின்ற இடைபிள்ளையின் வடிவழகைக் கண்டு என் பெண், துவள்கின்றாள் என்று ஒரு தாய் சொல்வது இந்த பாடலின் பொழிப்புரை
கண்ணனுடைய வடிவழகில் ஈடுபட்டு தன் என்ற தன்மையை இழந்து, ஒரு தம்பகம் போலத் திகைத்து நிற்பாள் தன்னுடைய பெண் என்கிறாள் அவளுடைய தாய்.
‘பல்’ என்ற சொல், பசுக் கூட்டங்களின் எண்ணிக்கையை காட்டுகிறது.
தன் திருமேனி நின்று ஓளி திகழ என்று சொன்னது, பசுக்கள் வயிறு நிறைய மேய்ந்து திரும்பியதையும், ‘பெண்களோடு கலப்பதற்குகான நேரம் வந்தது’ என்ற உகப்பாலும் திருமேனி விளங்கியதை கூறுகிறார்.
இவனுடைய தோழர்கள் கூட்டமும் திரளும் இட வல பக்கங்களில் நிறைந்து கொண்டு, பார்த்து மகிழ்ந்து கொண்டு வருகிறார்கள் என்று சொல்கிறார்.
குழலூதி இசை பாடிக் குனித்து என்று சொன்னது, ஆமருவி நிரை மேய்க்க, நீ சென்றது, பகல் எல்லாம் தன்னை பிரிந்து நோவுபட்டக் கிடந்த பெண்கள் தான் வருவதை அறிந்து கொந்தளிக்கும்படியாகவும், அவர்களைப் பிரிந்ததால் தனக்கு உண்டான ஆர்த்தி (வேதனை அல்லது துன்பம்) தோன்றும் படியாகவும் குழல் ஊதினான் என்கிறார். கூத்தன் கோவலன் என்னும்படி வருகின்றபோதே, நடையழகினால், வல்லார் ஆடினார் போல ஆடியும் வந்தான் என்கிறார்.
“என் மகள் அயர்க்கின்றது” என்று சொன்னது திகைத்து நிற்கிறபடி என்று ஆயிற்று.
Leave a comment