சிந்துரம் இலங்கத் தன் திரு நெற்றி மேல் திருத்திய கோறம்பும் திருக்குழலும், * அந்தரம் உழவத் தண் தழைக்காவின் கீழ் வரு ஆயரோடு உடன் வளைகோல் வீச, * அந்தம் ஓன்றில்லாத ஆயப் பிள்ளை அறிந்து அறிந்து இவ்வீதி போதுமாகில், * பந்து கொண்டான என்று வளைத்து வைத்துப் பவள வாய் முறுவலும் காண்போம் தோழீ.
பெரியாழ்வார் திருமொழி 3.4.6
தன்னுடைய திரு நெற்றியிலே சாத்தின சிந்தூர சூர்ணமானது விளங்கவும் அதுக்கு மேலே திருந்த சாத்தின திருக்குறம்பமும் அதுக்கு பிரபாகமான திருக்குழல் கற்றையும் விளங்கவும் ஆகாயம் முழுவதும் வாத்திய கோஷங்களால் முழங்கவும் குளிர்ந்த பீலிக் குடையாகிற சோலையின் கீழே தன்னுடன் வருகிற இடைப் பிள்ளைகளோடு கூட வளைந்த தடிகளை (ஒருவருக்கு ஒருவர் வெற்றி கூறி) எறிந்து கொண்டு வர, (ஒப்பனை முதலியவைகளால்) ஒவ்வொன்றே எல்லை காண ஒண்ணாத இடைப்பிள்ளையானவன், தன்னை ஒழிய எனக்கு செல்லாமையையும், எண்ணை ஒழியத் தனக்கு செல்லும் படியையும் அறிந்து வைத்தும் இந்த தெருவில் வருவான் ஆனால், “எங்கள் பந்தை (நாங்கள் விளையாடும் போது) பறித்துக் கொண்டு போனான்” என்று முறையிட்டு புறம் போகாதபடி தடுத்து வைத்து பவளம் போன்ற அவனது திருவதரத்தையும் புன் சிரிப்பையும் தோழி, நாம் கண்டு அனுபவிப்போம் என்று தோழிகள் ஒருவருக்கு ஒருவர் பேசுவதாய் இருப்பது இந்த பாசுரத்தின் பொழிப்புரை.
தோழி, வா, தன்னுடைய திருநெற்றியில் சிந்தூரமும், அதன் மேல் பிரகாசமாக சாற்றிக்கொண்ட திலகமும், அதனுடன் பொருந்திய திரு குழல் கற்றைகளும், ஆகாயம் முழுவதும் நிறைந்து இருந்த மத்தளங்களின் ஓசையும், குளிர்ந்த சோலைகளின் நடுவே தன்னுடைய தோழர்களுடன், வளைந்த தடிகளை வீசிக்கொண்டு, ஒவ்வொரு அலங்காரத்திலும் எல்லை இல்லாத அளவிற்கு அழகு தெரியும்படி நடந்து வருகின்ற கண்ணன், என் தன்மையும் அவன் தன்மையும் அறிந்து இந்த தெரு வழியே வருவானால், எங்கள் பந்தை பிடுங்கி போனவன் அன்றோ இவன் என்று இவனிடம் முறையிட்டு அவனின் பவளம் போன்ற சிவந்த அதரங்களையும் புன்சிரிப்பையும் ரசிப்போம் என்கிறாள்.
Leave a comment