விண்ணின் மீது அமரர்கள் விரும்பித் தொழ இறைத்து ஆயர்பாடியில் வீதியூடே, * கண்ணங் காலிப் பின்னே எழுந்தருளக் கண்டு இளவாய்க் கன்னிமார் காமுற்ற, * வண்ணம் வண்டமர் பொழில் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும், * பண்ணின்பம் வரப்பாடும் பத்தருள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே.
பெரியாழ்வார் திருமொழி 3.4.10
சுவர்க்க லோகங்களில் உள்ள தேவர்கள் உகந்து சேவித்து நிற்க, அவர்களை ஆதரிக்காமல், ஆயர்பாடியில் வீதிகளுக்கு நடுவே, பசுக்களின் பின்னே, கண்ணபிரான் எழுந்துயருளி நிற்பதைப் பார்த்து இளைய இடைப் பெண்கள் ஆசைப்பட்டபடியை வண்டுகளானவை, படிந்து கிடக்கிற சோலைகளுடைய ஸ்ரீ வில்லி புத்தூரில் உள்ளவர்களுக்கு நிர்வாககரான பெரியாழ்வார் அருளிச் செய்த சொல் மாலையான இப்பத்து பாசுரங்களையும் இன்பம் உண்டாகும்படி பண்ணிலே பாடுபவர்கள் பக்தர்களுக்கும் மேலாக ஸ்ரீ வைகுந்தத்தை அடைவார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
ஸ்ரீவைகுண்டத்தில் நித்யஸூரிகள் அனைவரும் தன்னைத் தொழுது நிற்கவும் எம்பெருமான் அங்கேயே வீற்றிருந்து தனது பரத்துவத்துடன் இருந்திருக்கலாம், ஆனால் அப்படி செய்யாமல், ஆயர்பாடியில் வந்து பிறந்தது தனது எளிமையை / ஸௌசீல்யத்தை வெளிப்படுத்துவதற்காக என்கிறார். இந்த பாசுரங்களை படிப்பவர்கள் ஸ்ரீவைகுந்தத்தை அடைவார்கள் என்று சொல்லி இந்த பதிகத்தை முடிக்கிறார்.
அரவத்தமளிப்படியே (5.2 .10) சர்வேஸ்வரனை எப்போதும் தன் திருவுள்ளத்தில் வைத்துக் கொண்டு இருக்கையாலே விஷ்ணுசித்தன் என்று திருநாமத்தை உடையவரான பெரியாழ்வார் என்கிறார்.
மேலானாதிற்கு எல்லாம் மேலானதான ‘பரமாத்மனை சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டு (திருப்பல்லாண்டு 12) என்கிறபடியே பகவத் அனுபவ மங்களாசாசனங்களை செய்து கால தத்துவம் உள்ளவரை இருக்கக்கூடிய தேசமான ஸ்ரீ வைகுந்தம் என்கிறார்.
Leave a comment