திவ்ய பிரபந்தம்

Home

3.4.5 சுற்றி நின்று ஆயர்

பெரியாழ்வார் திருமொழி 3.4.5

தோழரான இடையர்கள் சூழ நின்று கொண்டு பீலிக்குடைகளை திருமேனிக்குப் பாங்காகப் பிடித்து வர, சுருண்ட திருகுழல்களை பீலிக்கண்களாலே அலங்கரித்து இடையர்களுடைய தலைக்கடையில் நெஞ்சு பொருத்தி நின்று பாடவும், ஆடவும் பார்த்தேன்; இப்படிப்பட்ட இவனுக்கு ஒழிய வேறு ஒருவருக்கு என்று பேச விட மாட்டேன்; திருமாலிருஞ்சோலையில் என்னைத் தனக்கு என்று உரித்தாக்கிக் கொண்ட ஆச்சர்ய சக்தி உடைய எம்பெருமானுக்கு ஒழிய (என்னை என்ன செய்ய சொல்கிறாய்); கொற்றவனான அவனுக்கு இவள் தகுந்தவள் என்று நினைத்து கொடுக்கள் ; அப்படி கொடுத்தீர்கள் என்றால், உங்கள் குழப்பம் முடிவோடு பெரும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்”  (நாச்சியார் திருமொழி 1.5) என்ற உறுதியுடன் நின்ற ஆண்டாளைப் போன்ற ஆய்ச்சி இவள்.  இடைப்பிள்ளைகள் எல்லாம் தனக்குக் குடை பிடிக்கும்படி இருக்கும் இந்த கண்ணனை தவிர மற்றொரு பையனுக்கு என்னை உரிமைப் படுத்த நினைத்தீர்கள் ஆனால் குடி கேட்டு விடும் என்றும், இன்னொருவனை கொண்டு என் கழுத்தில் தாலி கட்டுவித்தாலும் நான் அந்த கண்ணனிடத்தே மிகுந்த ஆசை கொண்டு அதற்கேற்ப அவன் கிடைக்காவிட்டால் சிந்தயந்தியைப் போலே முடிந்து போவேன் என்றும், பிறகு உங்களுக்கு எந்நாளும் மனக்கவலையே ஆகும் என்றும், வெட்டு ஓன்று, துண்டு இரண்டாகச் சொல்கிறாள்.

சிந்தயந்தி, ஓர் ஆய் மகள் ; இவள் காவலுக்கு அகப்பட்டுக் கண்ணனைப் பெற முடியாமல், இருந்த இடத்திலேயே உள்ளே உருகி நைந்து முடிந்து போனாள் என்று வரலாறு.

மாலிருஞ்சோலை எம் மாயன் என்பது கண்ணனுக்கு என்பதாம். கண்ணன் என்று சொல்லாமல், மாலிருஞ்சோலை மாயன் என்று சொன்னது, அர்ச்சைக்கு இருக்கும் ஏற்றத்தை சொல்வதற்கு என்று உரையாசிரியர் கூறுகிறார். திருவாய்பாடி திருஅவதார காலத்தில் என்றும் மாலிருஞ்சோலை நித்திய சன்னதி என்றும் கூறுகிறார். மாலிருஞ்சோலை போலவே அசாதாரண மாயம் உடைய அவனே தனக்கு வேண்டும் என்று அவள் கூறுவதாக சொல்கிறார்.

Leave a comment