குன்று எடுத்து ஆநிரை காத்த பிரான், கோவலனாய்க் குழல் ஊதி ஊதி, * கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு கலந்துடன் வருவானைத் தெருவில் கண்டு * என்றும் இவனை ஓப்பாரை நங்காய் கண்டறியேன் ஏடி வந்து காணாய், * ஒன்றும் நில்லா வளை கழன்று துகல் ஏந்திள முலையும் என் வசம் அல்லவே.
பெரியாழ்வார் திருமொழி 3.4.4
கோப குலத்தில் பிறந்தவனாய், கோவர்தன மலையை குடையாக எடுத்து பசுக்களின் திரளை (மழை வந்து ஏழு நாட்கள் பெய்த போது) காப்பற்றிய உபகாரகன், வேய்ங்குழலை பல காலும் ஊதிக்கொண்டு கன்றுகளை மேய்த்து கூடப் போன தன் தோழர்களோடு கலந்து கூட வருகிறவனை தெருவிலே பார்த்து பெண்மையை பூரணமாக உடையவளே, எந்நாளும் இவன் போல்வாரை பார்த்து அறியேன்; தோழி, வந்து பார்; (அவனை கண்ட பின்பு) வஸ்திரமும் அரையில் தங்காதபடி கழன்று கை வளைகளும் ஒன்றும் நிற்கவில்லை; இளையதான முலைகளும் என்னுடைய வசத்தில் இல்லை என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
இந்திரன் பசி கோபத்தால் கல் மழையை பெய்வித்த போது, ‘கல் எடுத்து கல் மாரி காத்தாய்‘ (திருநெடுந்தாண்டகம்) என்கிறபடியே, முன்பு ‘ரக்ஷகம்’ என்று சொன்ன மலையை தூக்கி பசுக்களின் மேல் ஒரு துளி மழை விழாதபடி ரக்ஷித்த உபகாரகன் என்கிறார். காக்கப்பட்ட வர்க்கத்தில் ஒருவரும் தங்கள் பாதுகாப்பிற்கு ஒரு முயர்ச்சியும் செய்ய வில்லை ஆதலால், இப்படி மலையை ஏந்திய போது அவனுக்கு ஒரு ஆயாசம் தோன்றவில்லை.
தோழர்களுடன் வரும்போது, அவர்களில் ஒருவன் என்று தோன்றும்படி வந்தான். நங்காய் என்று சொன்னதால் தான் நினத்த காரியத்தை தனக்கு முடித்துக் கொடுக்கக் கூடிய குண பூர்த்தி உடையவள் என்கிறார்.
ஏந்திள முலையும் என் வசம் அல்லவே, என்று சொன்னதற்கு ‘கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து ஆவியை ஆகுலஞ் செய்யும்‘ என்ற ஆண்டாளின் நாச்சியார் திருமொழி (5.7) நினைவில் கொள்ளலாம்.
கண்ணன் எழுந்தருளிய போது, தெருவில் நின்று கொண்டிருந்த, ஒரு பெண் விசேஷத்துடனே, வருகின்ற கண்ணனைக் கண்டு, நம் தோழியும் கண்டு களிக்க வேண்டும் எனக் கருதி, வீட்டில் உள்ளே ஓரு தோழியை நோக்கித் “தோழி ! இதுவரை நம்மால் காணப்பட்ட உள்ளவர்களில் ஒருவரையும் ஒப்பாகச் சொல்லமுடியாத ஒரு லக்ஷண புருஷன் இப்படி வருகின்றான், சீக்கிரம் வந்து காணாய், என்று அழைக்க, அவள் ‘அவன் யார்? எந்த குடியில் பிறந்தவன்?’ போன்ற சில கேள்வி கேட்டுக் கொண்டு வரத் தாமதிக்க, அதற்கு அவள் ‘ஒருவன் ஆய்பாடியில் வந்து பிறந்து பற்பல மனிதற்கு அப்பாற்பட்ட செய்கைகள் செய்து உள்ளான்’ என்று கேட்டு உள்ளதாக சொல்கிறாள். அதை அவள் கேட்டு ‘அவன் அத்தனை அழகனோ என்று கேட்க, அதற்கு அவள் ‘பேதையே, இவன் அழகன் இல்லை என்றால், நான் இவ்வாறு, விகாரம் அடைவேனோ ? இங்கே பார், என் இடுப்பில் துணி தங்கவில்லை. இன்னும் என்ன வேண்டும் என்கிறாள். இவனைக் கண்டவுடனே தன் மனோதரம் பலிக்கவில்லை, அதனால் உடல் இளைக்கத் தொடங்கவே துணியும் வளையும் கழல்வதை பார்க்க வா என்று அழைக்கிறாள்.
Leave a comment