சுரிகையும் தெறிவில்லும் செண்டு கோலும் மேலாடையும் தோழன்மார் கொண்டு ஓட, * ஒரு கையால் ஒருவன் தன் தோளை ஊன்ற ஆநிரை இனம் மீளக் குறித்த சங்கம், * வருகையில் வாடிய பிள்ளை கண்ணன் மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள், * அருகே நின்றாள் என் பெண் நோக்கிக் கண்டாள் அது கண்டு இவ்வூர் ஒன்று புணர்க்கின்றதே.
பெரியாழ்வார் திருமொழி 3.4.3
உடைவாளையும், சுண்டு வில்லையும், பூச்செண்டு கொண்ட கோலையும், மேல் சாத்தையும், (தன்னை ஒரு நொடி பொழுது பிரிந்தாலும் தரிக்க மாட்டாத) தோழர்களையும், தங்கள் கையில் கொண்டு, (வேண்டிய போது கொடுக்கைக்காக ) ஓரடி விடாமல், உயிர் தோழனான ஒருவனுடைய தோளை ஒரு திருகையால் ஊன்றிக்கொண்டு, (மற்றொரு திருக்கையாலே) பசுக்கூட்டங்கள் திரும்புவதற்காக, ஊதின சங்கினை கையில் பிடித்து மீண்டு வருகின்ற அளவில், வாட்டத்தை உடையவனாக, ஒரு பிள்ளையாக, கண்ணனுடைய பட்டு படாத மஞ்சளையும், திருமேனியின் நிறத்தையும், அங்கங்களின் அழகையும், அவன் வருகிற வழிக்கு அருகில் நின்ற என் பெண் (எல்லோரும் பார்க்கிறார் போல ) பார்த்தாள் ; (அதுவும் இல்லாமல், அது ஒரு அபூர்வ தரிசனம் ஆகையால்), விரும்பி கண் வைத்துப் பார்த்தாள் ; இவள் கண் வைத்து பார்த்ததை கொண்டு இந்த ஊரில் உள்ளவர்கள், அவனோடு இவளுக்கு சம்பந்தத்தை கட்டி பிடித்து சொல்கிறார்கள்; என்று ஒருத்தியின் தாய் சொல்கிறாள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
ஒரு பெண்ணின் தாய் சொல்லும் பாசுரம் இது. கண்ணன் காட்டில் கன்றுகளை மேய்த்து விட்டு, தனது தோழரகளுடன் திரும்பி வரும் போது வழியில் நின்று கொண்டிருந்த தன் மகள் முதலில் அவனைப் பொதுவாகப் பார்த்தாள் என்றும், பிறகு ‘இவர்களில் இவன் மட்டும் மகா லக்ஷணங்கள் பொருந்தியவனாக இருக்கிறானே என்றும் சிறிது உற்று நோக்கினாள்; உலகத்தில் அபூர்வ பொருட்களை பார்ப்பவர்களுக்கு எல்லாம் இது இயல்பே; நெஞ்சில் ஒருவகை ஆசையைக்கொண்டு பார்த்தாள் என்று சொல்ல முடியவில்லை, ஆனால் ‘இவள் அவனை உற்று நோக்கினாள் இவளுக்கும் அவனுக்கும் ஏதோ இருக்கின்றது’ என்று ஊரார் வம்பு கூறுகின்றனர், இது தகுமோ? என்று முறைப்படுகின்றாள்.
கல் முதலியவற்றைச் செலுத்தும் சிறுவில். செண்டுகோல் என்ற நுனியில் பூஞ்செண்டு கோத்துள்ள தண்டம். நிரை என்றாலும் இனம் என்றாலும் கூட்டம் என்றே பொருள்; இதனால் எண்ணிறந்த பசுக்களை மேய்த்ததை சொல்லும். தூரத்தில் சென்ற பசுக்கள், கிட்டே வருவதற்கும், மேய்கைக்கும், பக்கங்களில் ஒதுங்காமல் மேய்வதற்கும், திரும்பி வருவதற்கும், மற்றும் சில காரியங்களுக்கும், விதம் விதமாக கண்ணன் சங்கு ஊதுவான். இப்போது திரும்பி வருவதால், ‘மீளக்குறித்த சங்கம்‘ என்கிறார்.
பசு மேய்க்க போகும்போது, விரோதிகளை அழிக்க சிறு வாளையும், லீலைகள் செய்ய அதற்கு உண்டானவைகளையும் சேர்த்து எடுத்து செல்கிறான் என்கிறார். முன்பு உடைவாள் என்றார், இப்போது சுரிகை என்கிறார்.
பசு மேய்த்து திரும்பி வரும்பொது, ஊதும் சங்கொலி, “பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலி” (நாச்சியார் திருமொழி 9,9) என்பது போல, அவன் திரும்பி வருவதை திருவாய்பாடியில் உள்ள பெண்களுக்கு அறிவிப்பது போல உள்ளது என்கிறார்.
Leave a comment