திவ்ய பிரபந்தம்

Home

3.4.2 வல்லி நுண் இதழ் அன்ன

பெரியாழ்வார் திருமொழி 3.4.2

கற்பக கொடியின் நுண்ணிய இதழ் போன்ற மிருதுவாகவும், அதே நிறத்தை உடையதாகவும் இருக்கிற பரியட்டத்தைக் கொண்டு, ஒரு பழுதும் இல்லாமல் இருக்கும் திருவரையில் விரித்து சாத்திக் கொண்டும், (அதற்கு மேலே) பெரிய கச்சை கிளப்பி பல்லியானது சுவர்களில் இடைவெளி இல்லாமல் பற்றி கிடப்பதைப் போல சிறிய உடை வாளை சாத்திக்கொண்டும், பல பீலிக் குடைகளின் நடுவே, அழகிய பரிமளம் வீசுகின்ற முல்லைப் பூவும் வேங்கை பூவுமாகிற இவற்றை தொடுத்து சாத்திக் கொண்டும் பலரான இடையருடைய திரள் நடுவில் அந்தியம் போது ஆகும் போது நந்தகோபன் குமரனான கண்ணன் வருவான் ; அவ்வழியில் எதிரே நின்று (உங்கள் கையில் இருக்கிற) திரளான வளைகளை இழக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று தோழிமார்கள் சொல்லிக் கொள்ளும் பாசுரம்.

தோழிகளே இவ்வூரில் ஒரு பிள்ளை இருக்கிறான், அவன் நல்ல நல்ல ஆடையைச் சாத்திக் கொண்டு கச்சும் கத்தியுமாகத் தனது தோழர்களுடன் மிக விசேஷமாக மாலைப் பொழுதில் இந்த திருவாய்பாடி வழியாக வருகிறான், அவன் வரும் அழகை காண விரும்பி வழியில் அவனை எதிர் கொண்டு நின்றவர்களில் ஒருவர் கூட தம் கை வளையை இழக்காதவர் இல்லை; ஆகையால், நீங்களும், ஜாக்கிரதையாக இருந்து கை வளைகளை பார்த்து கொள்ளுங்கள் என்று ஒருத்தி தன் தோழிகளுக்கு எச்சரிக்கை செய்கிறாள். வளை இழக்கை என்பது, மன்மத மன்மதனான எம்பெருமானை கண்ணால் பார்த்த உடனே, பெண்களுக்கு அவன் மேல் விசேஷமான மோகம் பிறக்கும்; அதற்கு ஏற்றபடி அவனோடு சேர்ந்தது இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலிடும், அது மிக அரிது; அதனால் உடனே உடல் இளைக்கும்; உடனே கைவளைகள் கழன்று விழும். வசையற என்று சொல்வது, குற்றம் இல்லாதபடி என்பது ஆடை உடுத்தி கொண்டு வருவான் என்பதாகும். பல்லிநுண்பற்றாக என்பது, உடைவாள் கச்சுப் பட்டையுடன் கூடவே பிறந்தது போல தோற்றம் அளிக்கும் என்றும் தனியாக வைத்து கட்டியது அல்ல என்றும் சொல்வதற்கு உதாரணமாக, பல்லி சுவரில் இடைவெளி இன்றி ஒட்டிக்கொண்டு உள்ளது சொல்ல பட்டது.  

Leave a comment