தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும் தண்ணுமை எக்கம் மத்தளி தாழ் பீலி, * குழல்களும் கீதமுமாகி எங்கும் கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு, * மழைகொலோ வருகின்றது என்று சொல்லி மங்கைமார் சாலக வாசல் பற்றி, * நுழைவனர் நிற்பனராகி எங்கும் உள்ளம் விட்டு ஊண் மறந்து ஒழிந்தனரே.
‘நாளை தொட்டு எங்கும் போகேல், கோலம் செய்து இங்கேயே இரு’ என்று சென்ற பதிகங்களில் சொன்ன யசோதை, ஏழு நாட்கள் சென்று திருவோணம் கொண்டாடிவிட்டு பசுக்களையும் கன்றுகளையும் மேய்க்கச் சென்று அவை நன்றாக மேய்ந்ததால் சந்தோஷம் அடைந்து, கண்ணன் பலவிதமாக தன்னை அலங்கரித்துக் கொண்டு, குழல் ஊதுவது சங்கீதம் பாடுவது என்று தன்னுடைய தோழர்களுடன் ஊர்வலமாக வருவது என்பதை திருவாய்பாடியில் உள்ள பெண்கள்
- மேல்மாடியில் இருந்து பார்த்து ரசிப்பதும்,
- பார்த்து ரசித்தவர்கள் அங்கேயே நிற்பதும்,
- அவன் அழகை காண்பதற்காக அவன் எதிரே வேறு வேலையாக வருவது போல வருவதும்,
- அவன் அழகை பார்க்க வராதவர்களை அழைத்துக் கொண்டு வந்து காண்பிப்பதுவும்
என்று அவன் பக்கம் காமம் கொண்ட பெண்களை பற்றி யசோதை ஆனந்தித்து பாடுவது போல அமைந்த பதிகம்.
பெரியாழ்வார் திருமொழி 3.4.1
தழை என்றும், தொங்கல் என்றும் பெயர் பெற்ற பீலிக்குடைகள் எங்கும் நிறைந்து மிருதங்கங்கள், ஒரு தந்தியை உடைய மத்தளி என்னும் வாத்யமும் பீலி தூக்கின திரு சின்னங்களும் இலை குழல், வேய்ங்குழல் முதலான முரளிகளும் ஜாதிக்குத் தக்க பாட்டுகளும் எங்கும் இவைகளைக் கொண்டு கண்ணபிரான் தன்னோராயிரம் பிள்ளைகளோடு தானுமாக வருகிற கூட்டத்தை பார்த்து மேக கூட்டங்கள் தான் தரை மேல் நடந்து வருகின்றன என்று யுவதிகளான பெண்கள் களித்துச் சொல்லி, ஜன்னல் வாசல் பற்றி ஆசையினால் சென்று மேல் விழுவதாக நுழைவாரும், குரு ஜன பீதி முதலியவற்றால் நிரபாரும் அவன் போன வழியெங்கும் நெஞ்சைப் பார்க்க விட்டு உணவை மறந்து விட்டார்கள்.
கண்ணன் கன்று மேய்த்து விட்டுத் தன்னுடைய ஆயிரம் ஆயிரம் தோழர்களுடன் கூடிப் பற்பல பீலிக்குடைகள் விசிறிகள் வாத்தியங்கள் முதலியவற்றுடன் வருகின்ற விதத்தை பார்த்து, அதனை கண்ட இளம் பெண்கள் ‘இவை மேகங்கள் திரண்டு உருண்டு வருகின்றனவோ’ என்று தங்களிடமே சொல்லிக் கொண்டு இவனை இடைவிடாது காண்பதற்காக தங்கள் மாளிகைகளில் இருந்து காண்கிறார்கள். அப்படி பார்த்ததும், கண்ணனுடைய அழகின் மிகுதியைக் காணக் காணப் பரவசர்களாய், நின்ற இடத்தில் நிற்காமல் சிலர் கண் கலங்கி ஜன்னல் வழியாக வெளிப்பட முயல்வாரும், சிலர் வீட்டில் உள்ளவர்களுக்கு அஞ்சி அந்த இடத்திலேயே திகைத்து நிற்பது என்று தங்கள் நெஞ்சங்களை இழந்து உண்ண வேண்டிய உணவையும் மறந்து இருந்தார்கள்.
Leave a comment