திண்ணார் வெண் சங்குடையாய் திருநாள் திருவோணம் என்று ஏழு நாள் * முன் பண்ணேர் மொழியாரைக் கூவி முளையட்டிப் பல்லாண்டு கூறுவித்தேன், * கண்ணாலம் செய்யக் கறியும் கலத்தரிசியும் ஆக்கி வைத்தேன், * கண்ணா நீ நாளைத் தொட்டுக் கன்றின் பின் போகேல் கோலம் செய்து இங்கேயிரு.
பெரியாழ்வார் திருமொழி 3.3.9
பகைவர்களை அழிப்பதில் நிலை நின்று முழங்கும் திண்மையை உடையவனே, வெண்மையான ஸ்ரீ பாஞ்சஜன்யத்தைத் திருக்கையில் உடையவனே, நீ பிறந்த திருநட்சத்திரமான திருவோண நக்ஷத்திரம் இன்றைக்கு ஏழா நாள் ஆகையாலே, அதுக்கு முன்னே, பண்ணோடே கூடின அழகிற மொழியை உடையவர்களை அழைத்து திருமுளை சாத்தி மங்களா சாசனம் செய்வித்தேன். திருக்கல்யாணம் திருவோணத் திருநக்ஷத்திரத்திற்குச் செய்வதாக கறியமுதுகளும், அமுதுபடிகளும் செய்து வைத்தேன். எனக்கு கண்ணாயிருந்தவனே, கன்றுகள் மேய்க்க போகும் நீ நாளை முதலாக கன்றுகளின் பின்னே போகாதே, ஆபரணங்களால் வந்த ஒப்பனையை உடையவனாக வீட்டை விட்டு போகாமல் இங்கேயே இரு என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
படைப்போர் புக்கு முழங்கு பாஞ்ச ஜன்யம் (திருபல்லாண்டு 2) என்றபடி, பகைவர்கள் அழிப்பதும் பாலன்ன வண்ணத்து உன் பாஞ்ச ஜன்யம் (திருப்பாவை 26) என்றபடி அதன் நிறமும் இங்கு சொல்லப்பட்டன.
பகைவர்களை அழிப்பதில் நிலை மாறாமல், நின்று முழங்குவது திண்மை என்று கூறபட்டது. யசோதை கண்ணனை நோக்கி அன்று விசாகம் நக்ஷத்திரம் என்றும், அதில் இருந்து ஏழாவது நாளாகிய திருவோண நக்ஷத்திரத்தில், அதாவது அவன் பிறந்த நக்ஷத்திரத்தில் அவனுக்கு விசேஷமான மங்கள காரியங்களைச் செய்வதற்காக மங்கலப் பாட்டுக்களையும் பாடுவதாகவும் சொல்கிறார். அன்றைக்கு வேண்டிய பொருட்களை இப்போதே எடுத்து வைத்து உள்ளேன். ஆகையால் இனி நீ மாடு மேய்ப்பதற்கு செல்ல வேண்டாம், நன்றாக அலங்கரித்துக் கொண்டு இவ்விடத்திலேயே இருக்க வேண்டும் என்று யசோதை வேண்டுகின்றாள்.
Leave a comment