கேட்டு அறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்கு, * காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்துடன் உண்டாய் போலும், * ஊட்ட முதல் இலேன் உன் தன்னைக் கொண்டு ஒரு போதும் எனக்கு அரிது, * வாட்டமிலாப் புகழ் வாசுதேவா உன்னை அஞ்சுவன் இன்று தொட்டும்.
பெரியாழ்வார் திருமொழி 3.3.8
கேசவா, இதற்கு முன் நான் உன்னிடத்தில் கேட்டு அறியாத எல்லாவற்றையும் இப்போது கேட்கின்றேன். ஆயர்பாடி மக்கள் இந்திரனுக்காக அனுப்பின சோற்றையும் அதற்குத்தக்க கறிகளையும் தயிரையும் சேரக் கலந்து மிச்சம் இல்லாமல் உண்டாயோ ? (இப்படி உண்ணவல்ல உனக்கு) நாள்தோறும் ஊட்ட கைமுதல் உடையேன் அல்லேன். உன்னை வைத்துக் கொண்டு ஒரு வேளையும் எனக்கு ஆற்றல் அரிது. எப்போதும் வாடாத புகழை உடைய வசுதேவர் திருமகனே, உன்னை குறித்து கேட்டு அறியாதன கேட்ட இன்று முதலாக பயப்படுகின்றேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
பிரம்மா மற்றும் ருத்ரன் இவர்களுக்கு காரணம் ஆனவன் ஆதலால் இவனை கேசவன் என்று அழைக்கிறார்.
‘ஆயிரம் கண்ணுடை இந்திரன் ஆருக்கு என்று ஆயர் விழவெடுப்ப, பாசனம் நல்லன பண்டிகளால் புகப் பெய்த அதனை யெல்லாம், போயிருந்து அங்கொரு பூத வடிவு கொண்டு உன்மகன் இன்று நங்காய், மாயன் அதனை யெல்லாம் முற்ற வாரி வளைத்து உண்டிருந்தான் போலும். (பெரிய திருமொழி 10.7.7) என்பது எல்லாவற்றையும் ஒன்று மிச்சம் இல்லாமல் உண்டான் என்கிறார்.
திருவாய்ப்பாடியில் ஆயர்கள் எல்லோரும் கூடி மழையின் பொருட்டாக இந்திரனை ஆராதிப்பது என்ற வழக்கப்படி சமைத்த சோற்றைக் கண்ணன் ஒரு முறை அவனுக்கு இடாதபடி விலக்கி, கோவர்த்தன மலைக்கு இடச் சொல்லித் தானே அமுது செய்தான் என்ற வரலாற்றைப் பலர் சொல்ல கேட்டு உணர்ந்த யசோதை அந்த கண்ணனை நோக்கி உனக்கு நான் நாள் தோறும் எவ்வளவு சோற்றை ஊட்டி வளர்க்க போகிறேன், அதற்கு எனக்கு சக்தி இல்லாததால், இனி உன்னை இவ்வாறு வளர்க்க ‘கைம்முதல் எனக்கில்லை’ என்று மிகவும் அஞ்சி நின்றாள்.
Leave a comment