பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய பாற்கடல் வண்ணா, * உன் மேல் கன்றின் உருவாகி மேய் புலத்தே வந்த கள்ள அசுரன் தன்னை, * சென்று பிடித்துச் சிறுக் கைகளாலே விளங்கா யெறிந்தாய் போலும், * என்றும் என் பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவார்களே.
பெரியாழ்வார் திருமொழி 3.3.7
வாராஹ அவதாரமும், கூர்ம அவதாரமும், மத்ஸ்ய அவதாரமும் செய்து அருளினவனாய் பாற்கடல் போன்ற வண்ணம் உடையவனே, உன்னை கொல்வதற்காக கன்றின் வடிவைக் கொண்டு கன்றுகள் மேய்கிற நிலத்திலே வந்து கலந்து நின்ற கள்ளத்தனமான அசுரர்களை, அவர்கள் சேஷ்டைகளாலே ‘அசுரர்’ என்று அறிந்து கொண்டு சிறிய கைகளாலே கன்றாய் நின்ற அசுரனைப் பிடித்து, அசுரனாக நின்று கொண்டு இருந்த விளா மரத்தின் மீது காய் உதிரும் படி எறிந்தாயோ? என் பிள்ளை திறத்தில் தீம்புகளை செய்பவர்கள் எப்போதும் அப்படியே மாண்டு போக கடவர்கள் என்று கை நெரித்து சீறிச் சொல்கிறாள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
வாராஹ அவதாரமும், கூர்ம அவதாரமும், மத்ஸ்ய அவதாரமும் எடுத்தது பற்றி சொல்லி, பன்றி, ஆமை, மீன் என்ற விலங்கு இனத்தில் அவதாரம் செய்து உலகத்தை காப்பாற்றிய எம்பெருமானின் எளிமையை சொல்கிறார். வாராஹ அவதாரத்தை முதலில் சொன்னதற்கு காரணம், பூமியை அபாயத்தில் இருந்து காத்தது மட்டும் இல்லாமல், ஸம்ஸாரிகள் உஜ்ஜீவிப்பிதற்கான உபாயங்களை அருளி செய்த ஏற்றத்தை சொல்கிறது. ‘ஏனத்துருவாய் இடந்த பிரான்‘ (ஞானபிரான்) (திருவிருத்தம் 10.9) என்று நம்மாழ்வாரும், ‘ஏனத்துருவாகி நிலமங்கை எழில் கொண்டான் ‘ ….. ‘ஞானத்தின் ஒளி உருவை’ என்றும், (பெரிய திருமொழி, 2.6.3) திருமங்கை ஆழ்வாரும், ‘எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப் பகல் ஒதுவித்து‘ (பெரியாழ்வார் திருமொழி 5.2.3) என்று பெரியாழ்வாரும் வாராஹ அவதார ஞான பிரானின் சிறப்பை சொல்வதை காணலாம்.
‘பாற்கடல்வண்ணா’ என்று கிருஷ்ணாவதாரத்தின் நிறத்தைச் சொல்லவில்லை. ‘பாலின் நீர்மை செம்பொன் நீர்மை’ (திருச்சந்த விருத்தம் 5.4) என்ற பாட்டில் சொன்னபடி, ஸாத்விகர்களான க்ருத யுக மனிதர்களுடைய ருசிக்குத் தக்கபடி திருமேனி நிறத்தை (பாற்கடல்) உடையவனாய், அவர்களைக் காத்து அருளிய வரலாறுகள் சொல்கிறார். இந்த உலகத்தை சூழ்ந்த கடலின் நிறத்தை உடையவனே என்று இந்த அவதாரத்தின் நிறத்தை சொல்லி இருக்கலாம்.
கன்றின் உருவத்தோடு வந்த வந்த அசுரன் வத்ஸாஸுரன். ‘அசுரர் தம்மை’ என்று பன்மையில் கூறியது ஆழ்வாருக்கு கிருஷ்ணனிடத்தில் இருக்கும் அதீத பிரேமத்தால், வந்த ஒருவனே பலராக தோன்றியதால் என்று கொள்ளலாம்.
கண்ணனே! உன்னை கொல்ல வந்த வத்ஸாஸுரனையும் கபித்தாஸுரனையும் எளிதில் முடித்தவன் அன்றோ நீ , என்று யசோதை சொல்ல, அவன் ‘ஆம்’ என்று பதில் அளிக்க, யசோதை ‘என்னுடைய பிள்ளைக்குத் தீமை செய்ய நினைப்பவர்கள் என்றும் அப்படியே மாளக் கடவர்கள்’’ என்று சாபம் இடுகிறாள்.
Leave a comment