திவ்ய பிரபந்தம்

Home

3.3.10 புற்றர வல்குல் அசோதை

புற்றர வல்குல் அசோதை நல்லாய்ச்சி தன் புத்திரன் கோவிந்தனை, * கற்றினம் மேய்த்து வரக் கண்டு உகந்து அவள் கற்பித்த * மாற்றமெல்லாம் செற்றமிலாதவர் வாழ் தரு தென் புதுவை விட்டு சித்தன் சொல், * கற்றிவை பாட வல்லார் கடல் வண்ணன் கழலிணை காண்பார்களே.

பெரியாழ்வார் திருமொழி 3.3.10

புற்றிலே வளருகிற பாம்பின் படத்தை ஒத்த இடையை உடையவளான யசோதை என்னும் பெயர் உடையவள், தன் பிள்ளையிடத்தில் பேரன்பை உடைய ஆய்ச்சி, தன்னுடைய பிள்ளையை பசுக்களை காப்பதால் வந்த கோவிந்தன் என்ற திருநாமத்தை உடையவனை, கன்றுகளின் கூட்டங்களை வயிறு நிறைய மேய்த்து திரும்பி வர கண்ணாரக் கண்டு மணம் மகிழ்ந்து அவள் அவனை குறித்து இன்னபடி இன்னபடி செய் என்று கற்பித்த சொற்கள் எல்லாவற்றையும் தாம் செய்யும் செய்கைகளில் கர்வம் இல்லாதவர்கள் வாழ்கின்ற அழகிய ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு நிர்வாககரான பெரியாழ்வார் அருளிச் செய்த சொற்களை ஒரு ஆச்சார்யன் பக்கம் கற்று, (அதில் உண்டான இனிமையாலே, வாய் படைத்த பயன் பெறப்) பாட வல்லவர்கள் கடல் போன்ற திரு நிறத்தை உடையவனான கிருஷ்ணன் உடைய ஒன்றுக்கு ஒன்று ஒப்பான திருவடிகளை கண்டு அனுபவிக்கப் பெறுவார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

புற்றிலே வளர்கின்ற பாம்பின் படத்தை ஒத்த அல்குலை உடையளாய், யசோதை என்னும் பெயரை உடையளாய், பிள்ளையிடம் நன்மை உடையவளான, ஆய்ச்சி தன் மகனான கண்ணனை, கன்றுகளை மேய்த்து விட்டு மீண்டு வருபவனை கண்டு மனம் மகிழ்ந்து யசோதை தன் மகனை குறித்து இதை செய், இதை செய்யாதே என்று சொன்ன வார்த்தைகளை ஸ்ரீ வைஷ்ணவர்களை கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் நகரின் நிர்வாகரரான பெரியாழ்வார் அருளி செய்த வார்த்தைகளை பாட வல்லவர்கள், கடல் போன்ற நிறத்தை உடைய எம்பெருமானின் திருவடிகளை கண்டு மகிழ்வார்கள் என்று சொல்லி இந்த பதிகத்தை முடிக்கிறார்.

Leave a comment